பரங்கிப்பேட்டை அருகே, மணல் குவாரியை கிராம மக்கள் முற்றுகை


பரங்கிப்பேட்டை அருகே, மணல் குவாரியை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Jan 2020 3:30 AM IST (Updated: 27 Jan 2020 6:18 PM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டை அருகே மணல் குவாரியை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பரங்கிப்பேட்டை,

பரங்கிப்பேட்டை அருகே சிலம்பிமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகிலேயே தனியார் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, கூடுதலாக ஆழம் தோண்டி மணல் எடுப்பதாகவும், இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்த விட்டதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் கிராம மக்கள் புகார் கூறி வந்தனர். எனவே இந்த குவாரியை மூட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் குவாரி மூடப்படவில்லை.

இந்த நிலையில் குடியரசு தினத்தையொட்டி நேற்று முன்தினம் சிலம்பிமங்கலத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மணல் குவாரியை மூட வேண்டும் என்று கிராம மக்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அந்த தீர்மானத்தில், குவாரியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் 20 அடி ஆழம்வரை மணல் தோண்டி எடுக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மணல் குவாரியை தடை செய்ய வேண்டும். அதனை மூட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கிராமசபை கூட்டம் முடிந்ததும், கிராம மக்கள் ஒன்று திரண்டு மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு அவர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story