கிராமசபை கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் - கார்த்திசிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்


கிராமசபை கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் - கார்த்திசிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Jan 2020 3:30 AM IST (Updated: 27 Jan 2020 7:12 PM IST)
t-max-icont-min-icon

கிராமசபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கார்த்திசிதம்பரம் எம்.பி. கூறினார்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி கிழக்கு வட்டார தலைவர் ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி வரவேற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட கார்த்திசிதம்பரம் எம்.பி பேசியதாவது:–

நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சிக்கான நிதியாக ரூ.5 கோடி மட்டும் தான் ஒதுக்கப்படுகிறது. ஒரு தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 3 பேரூராட்சி, 3 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இதை கொண்டு இதற்கு தேவையான நிதியை ஒதுக்க முடியவில்லை. எனவே ஊராட்சி பொது நிதியில் இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி–குண்டாறு இணைப்பிற்கு இது வரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை. மேலும் தமிழக அரசு இந்த திட்டத்தை பற்றி மத்திய அரசுக்கு எந்த கடிதமும் கொடுத்து அதை நிறைவேற்ற முயற்சி செய்யவில்லை. எனவே இந்த திட்டம் என்பது சாத்தியமற்றது. இருந்தாலும் கூட இந்த திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு நடைபெறும் கிராம சபை கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டால் மட்டும் தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரமகாலிங்கம், அழகுமீனாள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுந்தரம், ராஜசேகரன், மாநில எஸ்.சி பிரிவு துணைதலைவர் டாக்டர் செல்வராஜ், சஞ்சய் காந்தி, நகர தலைவர் கணேசன், மேற்கு வட்டார தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story