பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோரை உடனே தூக்கிலிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்


பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோரை உடனே தூக்கிலிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
x
தினத்தந்தி 28 Jan 2020 3:30 AM IST (Updated: 27 Jan 2020 8:00 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை உடனே தூக்கிலிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.

சிவகாசி,

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சிவகாசியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது. பெற்றோர்கள் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலமாக குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வளவு காவல்துறையினர் இருந்தும் அங்கொன்றும், இங்கொன்றுமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனே தூக்கிலிட வேண்டும். நேர்மையான அதிகாரிகளை கொண்டு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். நீதிமன்றங்கள் மூலமாக விசாரணை நடத்தலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் உள்ளது. அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். ஐதராபாத்தில் உடனுக்குடன் தண்டனை வழங்கப்பட்டதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

5-வது, 8-வது வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த எடுத்த முடிவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். 10-ம் வகுப்பு வரை 100 சதவீதம் மாணவர்களுக்கு

தேர்ச்சி கொடுக்க வேண்டும். 5-ம் வகுப்புக்கு பொது தேர்வு என்ற நிலை வந்தால் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மீண்டும் படிப்பை தொடருவதில் சிக்கல் ஏற்படும். அவர்கள் கல்வியை தொடராமல் வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும். அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்களை கட்ட வேண்டும். சிறந்த ஆசிரியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். கல்வி தரத்தை உயர்த்த வேண்டும்.

டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்து வருகிறது. இது தொடர்பாக பிரதமரை 2 முறை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறேன். நாடாளுமன்றத்தில் பல முறை பேசி இருக்கிறேன். இந்த திட்டம் தேவையற்ற திட்டம். டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்க வேண்டும். அந்த பகுதியில் விவசாய தொழில்கள் மட்டும் நடக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்து வருகிற சட்டமன்ற கூட்ட தொடரில் சட்டம் நிறைவேற்ற வேண்டும். முதல்–அமைச்சர் விவசாயத்தை பாதுகாக்க இதுபோன்ற சட்டங்களை கொண்டு வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அந்த பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதி வாரி கணக்கெடுப்பு சேர்த்து நடத்த வேண்டும். இது குறித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். ஜாதி வாரி கணக்கு மூலம் தான் இடஒதுக்கீட்டில் உள்ள சட்ட சிக்கல்களை தீர்க்க முடியும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடு நடந்துள்ளதை ஏற்கனவே பாட்டாளி மக்கள் புகாராக தெரிவித்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். உரிய தண்டனை வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து கடந்த 4 ஆண்டுகளில் குரூப்-1,2,3,4 ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இதில் யாராவது தவறு செய்திருந்தது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் தற்போது இந்த தேர்வின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணையும், நடவடிக்கையும் இருக்க வேண்டும்.

 கோர்ட்டு மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 3321 மதுக்கடைகளை நாங்கள் மூடி இருக்கிறோம். பூரண மதுவிலக்கை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எங்கள் இலக்கு தமிழகத்தில் பூரண மது விலக்குதான். சட்டரீதியாக இந்தபிரச்சினையை நாங்கள் அணுகி தமிழகத்தில் மது விற்பனையை இல்லாமல் ஆக்குவோம். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். இதைத்தொடர்ந்து கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொண்டார்.

Next Story