குன்னூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 214 பேருக்கு பணி நியமன ஆணை


குன்னூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 214 பேருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 28 Jan 2020 3:30 AM IST (Updated: 27 Jan 2020 11:30 PM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 214 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார(மகளிர் திட்டம்) இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குன்னூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேல் தொடங்கி வைத்து பேசியதாவது:-

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 61 ஆயிரத்து 447 மனுதாரர்கள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, பிளஸ்-2 போன்ற கல்வித்தகுதிகள், ஓட்டுனர், நடத்துனர், எலெக்ட்ரீசியன், மோட்டார் மெக்கானிக், மருந்தாளுநர் போன்ற தொழில்நுட்பத் தகுதிகள், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் கல்வி தகுதிகளை பதிவு செய்து அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தொடர்ந்து புதுப்பித்து வருகின்றனர். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற பதிவுதாரர்களை ஊக்குவிக்கும் வகையில் அலுவலகத்தில் மாதந்தோறும் அனைத்து வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போட்டித்தேர்வு இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு கடந்த ஆண்டு 20 பேர் தேர்ச்சி பெற்று அரசு பணியில் உள்ளனர்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் அளிக்கப்படும் பல்வேறு திறன் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு உதவி மையத்தில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவுகளை மேற்கொள்ளுதல், வழிகாட்டும் தகவல்கள் அளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை பதிவுதாரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் 10-ம் வகுப்பு தேறிய மற்றும் தவறிய, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படித்து வேலைவாய்ப்பற்றவர்கள் 674 பேர் கலந்துகொண்டனர். 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றன. அசல் கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணியில் சேர்க்கப்பட்டனர். முடிவில் 214 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன. இதில் மகளிர் திட்ட அலுவலர் பாபு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர் விழி, ஊட்டி திட்ட அலுவலர் ராமகிரு‌‌ஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story