மாவட்ட செய்திகள்

கல்லட்டி நீர்வீழ்ச்சியில், தண்ணீரில் மூழ்கிய வாலிபர்களை தேடும் பணி 2-வது நாளாக நீடிப்பு + "||" + At Kallatti Falls, The submerged plaintiffs Extended day 2 of searching

கல்லட்டி நீர்வீழ்ச்சியில், தண்ணீரில் மூழ்கிய வாலிபர்களை தேடும் பணி 2-வது நாளாக நீடிப்பு

கல்லட்டி நீர்வீழ்ச்சியில், தண்ணீரில் மூழ்கிய வாலிபர்களை தேடும் பணி 2-வது நாளாக நீடிப்பு
கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீரில் மூழ்கிய வாலிபர்களை தேடும் பணி 2-வது நாளாக நீடித்தது.
மசினகுடி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி எல்க்ஹில் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(வயது 24). இவரது தந்தை கிரு‌‌ஷ்ணமூர்த்தியின் ஈமச்சடங்குக்காக திருப்பூரை சேர்ந்த நண்பர்கள் ஆனந்த்(25), விஜயகுமார்(23) ஆகியோர் ஊட்டிக்கு வந்தனர். ஈமச்சடங்கு முடிந்த பிறகு சுந்தர்ராஜ், ஆனந்த், விஜயகுமார் மற்றும் ஊட்டி விக்டோரியா ஹால் பகுதியை சேர்ந்த சாமுவேல்(23), எல்க்ஹில் பகுதியை சேர்ந்த கணேசன்(24), பரத்(26), பெர்ன்ஹில் பகுதியை கிப்சன்(23) ஆகிய 7 பேர் கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அங்கு சாமுவேல், கணேசன் ஆகியோர் தண்ணீரில் இறங்கி விளையாடினர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்த தகவலின் பேரில் காவல், தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாலையில் இருள் சூழ தொடங்கியதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை 9 மணிக்கு 2-வது நாளாக வாலிபர்களை தேடும் பணி நடந்தது. உள்ளூர் இளைஞர்களுடன், தீயணைப்பு வீரர்கள் இணைந்து கயிறு கட்டி தண்ணீருக்குள் இறங்கி தேடினர். மேலும் துடுப்பு படகு கொண்டு வரப்பட்டு, நீளமான குச்சியை தண்ணீருக்குள் குத்தி தேடி பார்த்தனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

இது தவிர நீர்வீழ்ச்சியில் கொட்டி செல்லும் தண்ணீர் வேகமாக செல்ல வழிவகை செய்யப்பட்டது. மேலும் காமராஜ் சாகர் அணையில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும் வனப்பகுதியில் இருந்து வரும் தண்ணீரை திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் இருள் சூழ தொடங்கியதாலும், கடுங்குளிர் நிலவியதாலும் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு படையினர் 20 பேரும், கன்னியாகுமரில் இருந்து கடலில் மூழ்கி முத்து எடுக்கும் திறமை கொண்ட 4 பேரும் ஊட்டிக்கு வர உள்ளனர். அவர்கள் இன்று(புதன்கிழமை) தேடும் பணியில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட வன அதிகாரி குருசாமி நிருபர்களிடம் கூறும்போது, கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். உள்ளூர் மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். தற்போது நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதை அடுத்து, நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்படுவதுடன், இனிமேல் யாரும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கல்லட்டி நீர்வீழ்ச்சியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பலியான 2 வாலிபர்களின் உடல் மீட்பு
கல்லட்டி நீர்வீழ்ச்சியில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பலியான 2 வாலிபர்களின் உடல் மீட்கப்பட்டது.