மயிலாடுதுறையில், நெருக்கமாக இருந்த ‘வீடியோவை’ காட்டி பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்
மயிலாடுதுறையில் நெருக்கமாக இருந்த ‘வீடியோவை’ காட்டி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயரும், பலாத்காரம் செய்ய முயற்சித்த அவரது நண்பரும் ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்னஎரகலி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சந்தோஷ்குமார்(வயது25). என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவருடைய நண்பர் மயிலாடுதுறை அருகே அக்களூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் கண்ணன்(36). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சந்தோஷ்குமார், கடந்த ஒரு ஆண்டாக மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்தார்.மாணவியின் பெற்றோர் வெளியூர் சென்று இருந்த நேரத்தில் சந்தோஷ்குமார், அந்த மாணவியுடன் நெருக்கமாக பழகி அதை தனது செல்போனில் ‘வீடியோ’ எடுத்து வைத்திருந்தார். இந்த ‘வீடியோவை’ காட்டி சந்தோஷ்குமார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சந்தோஷ்குமாரும், அந்த மாணவியும் நெருக்கமாக இருந்த ‘வீடியோ’ பதிவை சந்தோஷ்குமாரின் நண்பர் கண்ணனும் பார்த்துள்ளார். சம்பவத்தன்று மாணவியின் வீட்டுக்கு சென்ற கண்ணன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக தெரிகிறது.
இதனால் மாணவி கூச்சல் போட்டதில், அவருடைய தாய் அங்கு ஓடி வந்து பார்த்தபோது, கண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமார், கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story