குடியரசு தினவிழா கொண்டாட்டம்
திருச்சி மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் நடந்தன.
திருச்சி,
ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு உதவி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி, மரியாதை செலுத்தினார். விழாவையொட்டி சேதுராப்பட்டி கிராமத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, சாலை விபத்துகளில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கும், காயம் அடைந்தவர்கள் என மொத்தம் 16 பேருக்கு ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிற்கு காசோலை ஆகியவற்றை வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் உதவி கலெக்டர் வழங்கினார்.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து அரசியல் சாசன உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், வக்கீல் சரவணன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெரியமிளகுபாறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் இந்திரஜித் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி படிக்க அதை அனைவரும் திரும்ப படித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கிராப்பட்டி கிளை சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கிராப்பட்டி ஜும்மா பள்ளிவாசல் தலைவர் பசுலுதீன் விழாவுக்கு தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். த.மு.மு.க. மாநில பொருளாளர் சபியுல்லா கான் நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட தலைவர் ஜாபர் அலி, பகுதி செயலாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி காஜாமலை ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நடந்த குடியரசு தினவிழாவுக்கு சங்க செயலாளர் ஆலயமணி தலைமை தாங்கினார். மின்வாரிய அதிகாரி ஆறுமுகம் தேசிய கொடி ஏற்றினார். பொருளாளர் வீரையா உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சி காந்தி நகர் அருகில் உள்ள பெரியார் நகரில் நடைபெற்ற விழாவுக்கு பெரியார் நகர் நல மன்ற தலைவர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் ரசூல் தேசிய கொடிஏற்றி இனிப்பு வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் தாண்டவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஹபீப் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகமது நகர் ஜே.எம்.டி. சுன்னத் பள்ளிவாசலில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளிவாசல் தலைவர் அப்துல் சலீம் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். பொருளாளர் ஜாகீர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கத்தின் சார்பில் குடியரசு தினவிழா மேலரண்சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் காத்தான் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மஸ்தான் வரவேற்று பேசினார். மனித உரிமைகள் தன்னார்வ தொண்டு கழகத்தின் மாநில துணைத் தலைவர் பஷீர் அகமது தேசிய கொடி ஏற்றினார்.
திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வளாகத்தில் மத்திய மண்டல துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து பணியின்போது இறந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், சிறப்பாக பணியாற்றிய 21 தீயணைப்பு படை வீரர்களை பாராட்டி பதக்கங்களை அணிவித்தார். விழாவையொட்டி, ஏழை-ஏளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் புளுகாண்டி, நிலைய அலுவலர் மெல்கியுராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story