குடியிருக்க வீட்டுமனை கேட்டு தாலுகா அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் - ஊத்துக்குளியில் பரபரப்பு


குடியிருக்க வீட்டுமனை கேட்டு தாலுகா அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் - ஊத்துக்குளியில் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Jan 2020 10:00 PM GMT (Updated: 27 Jan 2020 7:59 PM GMT)

குடியிருக்க வீட்டுமனை கேட்டு ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊத்துக்குளி,

குடியிருக்க வீட்டு மனை கேட்டு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் வி.பி.பழனிச்சாமி தலைமையில் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று காலை ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் தாலுகா அலுவலகத்திற்குள் சென்று தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ஈஸ்வரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஊத்துக்குளி செயலாளர் முத்துச்சாமி, விவசாய சங்க தாலுகா செயலாளர் கேசவன், பனியன் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் அ.பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளியம்பாளையம், கே.டி.கே நகர், ராஜ கணபதி நகர், அருள் ஜோதி நகர், நல்லகட்டிபாளையம், மொரட்டுபாளையம் ஊராட்சியில் உள்ள திம்மநாயக்கன் பாளையம், சப்பட்நாயக்கன்பாளையம், பெட்டிக்கடை, அண்ணா நகர், சிவசக்தி நகர், மணியோசை நகர், மொரட்டுபாளையம் எஸ்.பெரியபாளையம் ஊராட்சியில் உள்ள குளத்துப்பாளையம் விருமண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தில்லைகுட்டைபாளையம், அணைப்பாளையம் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள், நீர்நிலை புறம்போக்குகளில் குடியிருப்பவர்கள், ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் குடியிருந்து வருபவர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது “குடியிருக்க வீ்டு இல்லாததால், இலவச வீட்டு மனை கேட்டு பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஊத்துக்குளி தாசில்தார் கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் ஊத்துக்குளி தாலுகா பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்கள் கண்டறிந்து பாதை அமைத்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அனைவருக்கும் வீட்டுமனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். பேச்சுவார்த்தையின் போது மண்டல துணை வட்டாட்சியர் தங்கவேல், ஊத்துக்குளி நில வருவாய் ஆய்வாளர் நந்தினி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story