மலுமிச்சம்பட்டி கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது - நண்பருக்கு வலைவீச்சு


மலுமிச்சம்பட்டி கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது - நண்பருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Jan 2020 10:15 PM GMT (Updated: 27 Jan 2020 8:01 PM GMT)

மலுமிச்சம்பட்டி கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போத்தனூர்,

குடியரசு தினத்தையொட்டி நேற்று முன்தினம் கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி தலைவர் பழனியம்மாள் தலைமை தாங்கினார்.

அப்போது, அலுவலகத்திற்குள் வந்த 2 வாலிபர்கள் அங்கிருந்த மைக்கை பறித்து மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு நகல் கொடுப்பது இல்லை, தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் உடனே இங்கு வரவேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் அவர், மலுமிச்சம்பட்டி ஊராட்சி தலைவர் பழனியம்மாள் பற்றியும் அவதூறாக பேசி உள்ளனர்.

உடனே அங்கிருந்த பொதுமக் கள் அவர்கள் 2 பேரை தடுத்து உள்ளனர். ஆனால் அவர்கள் 2 பேரும் ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதோடு கிராம சபை கூட்டம் முடிந்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது பழனியம்மாளிடம் அவர்கள் 2 பேரும் தகராறு செய்து உள்ளனர்.

இது குறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஊராட்சி தலைவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த மலுமிச்சம்பட்டி பழனிச்சாமி நகரை சேர்ந்த பூபதி (வயது 31) என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பூபதியின் நண்பர் பறைவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story