வருகிற 1-ந் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் - கலெக்டர் தகவல்


வருகிற 1-ந் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Jan 2020 11:00 PM GMT (Updated: 27 Jan 2020 8:14 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 1-ந் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தூத்துக்குடி, 

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. அதே போன்று மூப்பன்பட்டி, உருளைக்குடி, தத்தனேரி, வெள்ளூர் ஆகிய 3 பஞ்சாயத்துகளில் துணைத்தலைவர் தேர்தலும் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் இதுவரை எந்தவித முறைகேடும் நடந்ததாக தகவல் இல்லை. விசாரணையில் ஏதேனும் வெளிவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் முன்மாதிரியாக செயல்படுத்தப்படுகிறது. வருகிற 1-ந் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. இதனால் ரேஷன்கார்டுதாரர்கள் மாவட்டத்தில் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம். இந்த திட்டம் செயல்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக இந்த திட்டம் முன்மாதிரியாக அமல்படுத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு கடையிலும் கூடுதலாக பொருட்கள் இருப்பு வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வெளியூர்களில் சென்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இந்த திட்டம் பயன் அளிக்கும். பெரும்பாலும் சொந்த ஊரிலேயே பொருட்களை வாங்கி விடுவார்கள். இதனால் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை.

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தை விரைந்து அமைக்க ரெயில்வே துறையில் உரிய அனுமதி அளிக்க வலியுறுத்தி உள்ளோம். தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிக்கான நிலம் கையகப்படுத்துவதற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story