கந்துவட்டி கொடுமையால் விபரீதம்: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி


கந்துவட்டி கொடுமையால் விபரீதம்: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 27 Jan 2020 11:15 PM GMT (Updated: 27 Jan 2020 8:14 PM GMT)

கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். மற்றொரு பெண் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 நுழைவு வாசல்களிலும் போலீசார் நின்று தீவிர பரிசோதனைக்கு பிறகே மனு கொடுக்க பொதுமக்களை உள்ளே அனுமதித்தனர்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிரதான கட்டிடம் முன்பு திடீரென்று 2 பெண்கள் தங்களது உடலில் மண்எண்ணெய் ஊற்றினர். பின்னர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தனர். இதைக்கண்ட போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு பாய்ந்து சென்றனர். 2 பேரையும் தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் மீது உடனடியாக தண்ணீர் ஊற்றப்பட்டது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், களக்காடு சிதம்பராபுரத்தை சேர்ந்த முருகன் மனைவி கிருஷ்ணவேணி (வயது 31), முருகனின் தம்பி புகழ்சேட்டு மனைவி பாமா (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் அதே பகுதியை சேர்ந்த 2 பேரிடம் கோலிசோடா கம்பெனி நடத்துவதற்காக ரூ.2.20 லட்சம் கடன் வாங்கி இருந்தனர். அதற்கு ரூ.7 லட்சம் வரை திருப்பி செலுத்திய பிறகும், வட்டி மற்றும் அசல் தொகை தரவேண்டும் என்று கேட்டு உள்ளனர். இதுகுறித்து களக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த வாரம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதனால் கலெக்டரிடம் மீண்டும் மனு கொடுக்க வந்தோம். அப்போது முருகன் மற்றும் புகழ்சேட்டு ஆகியோர் மனுவை பதிவு செய்வதற்காக சென்றிருந்தனர். அந்த நேரத்தில் இருவரும் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை அறிந்த கலெக்டர் ஷில்பா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் தீக்குளிக்க முயன்ற 2 பெண்களிடமும் விசாரணை நடத்தினார். பின்னர் எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு ஆகாது. உங்களது மனு குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொழில் செய்வதற்கு வங்கிகள் மூலம் கடன் பெற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

இதையடுத்து 2 பெண்கள் உள்பட 4 பேரையும் போலீசார் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி 2 பெண்கள் உள்ளே மண்எண்ணெய் கேனுடன் நுழைந்தது எப்படி? என்று கலெக்டர் போலீசாரை எச்சரிக்கை செய்தார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். உடனடியாக டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் ஆலங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கனகராஜ் மனைவி சித்ரா (29) தன்னுடைய குழந்தைகள் கவின் (9) மற்றும் கார்த்திகா (7) ஆகியோருடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலுக்கு வந்து மயங்கி விழுந்தார். இதைக் கண்ட போலீசார் அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது தன்னிடம் வரதட்சணை கேட்டு மாமியார், நாத்தனார் கொடுமை செய்வதாகவும், அதனால் அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

உடனடியாக போலீசார் அங்கு நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் 3 பேரையும் ஏற்றி, ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் 3 பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story