சாயர்புரம் அருகே, கிராம சபை கூட்டம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு


சாயர்புரம் அருகே, கிராம சபை கூட்டம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Jan 2020 4:00 AM IST (Updated: 28 Jan 2020 1:45 AM IST)
t-max-icont-min-icon

சாயர்புரம் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டார்.

சாயர்புரம், 

சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி பஞ்சாயத்தில் குடியரசு தினவிழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, 17 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கிராமப்புறங்களில் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அப்போது தான் நோய்கள் வராமல் தடுக்க முடியும். போசான் அபியான் திட்டத்தின் கீழ் அங்கன்வாடிகளில் கர்ப்பிணிகள், தாய்மார்கள், குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்துடன் கூடிய உணவுகள் வழங்கப்படுகிறது. இதனால் பிறக்கும் குழந்தைகள் உள்பட அனைவரது ஆரோக்கியமும் மேம்படும். அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளை அமைத்து பயன்படுத்த வேண்டும். வீடுகளில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வழங்க வேண்டும். இந்த கிராமம் குப்பைகளை தரம் பிரித்து கையாளுவதில் மாதிரி கிராமமாக, மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற வேண்டும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். டெங்கு விழிப்புணர்வு பணிகள் அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு கொசு நல்ல தண்ணீரில் வளரும் என்பதால், அதனை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், முழு சுகாதார தமிழகம், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளை பாராட்டுதல், தெருவிளக்கு பராமரித்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், பிரதம மந்திரி காப்பீடு திட்டம், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர் உமாசங்கர், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய குழு தலைவர் வசந்தா, ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட இயக்குனர் விநாயகசுப்பிரமணியன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணலீலா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) சத்யநாராயணன், மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், நாகராஜ், யூனியன் துணைத்தலைவர் விஜயன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குலசேகரன்பட்டினம்

குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. பஞ்சாயத்து தலைவி சொர்ணபிரியா தலைமை தாங்கினார். யூனியன் ஆணையாளர் ராணி, பஞ்சாயத்து துணை தலைவர் கணேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உடன்குடி அனல் மின்நிலையத்தில் குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். குலசேகரன்பட்டினத்தில் மத்திய அரசு கேந்திரிய வித்யாலய பள்ளி தொடங்க வேண்டும். குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பஞ்சாயத்து செயலாளர் அப்துல் ரசாக் நன்றி கூறினார்.

Next Story