ஆலங்குளம் அரசு பள்ளிகளில் பூங்கோதை எம்.எல்.ஏ. ஆய்வு
ஆலங்குளம் அரசு பள்ளிகளில் பூங்கோதை எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆலங்குளம்,
கடந்த வருடம் அக்டோபர் மாதம் பெய்த பருவமழை காரணமாக ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கே மாணவர்கள் அமர்ந்து கல்வி பயில முடியாத நிலை உருவானது. இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சுமார் 150 மாணவர்கள் அருகில் உள்ள வேறு பள்ளி கட்டிடத்தில் மற்ற மாணவர்களுடன் இணைந்து அமர்ந்து படித்து வருகின்றனர்.
மேலும் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதிப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து 2 பள்ளிகளையும் பூங்கோதை எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், தொடக்கப்பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளியை சுற்றியுள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு, பள்ளி முன்பாக சிமெண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மேல்நிலைப்பள்ளியின் நிலை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் பேசி தக்க முடிவு எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியை கிறிஸ்டல் மேரி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இம்மானுவேல் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story