டாஸ்மாக் கடை அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பு


டாஸ்மாக் கடை அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பு
x
தினத்தந்தி 28 Jan 2020 3:30 AM IST (Updated: 28 Jan 2020 1:49 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் டாஸ்மாக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திரளாக வந்து மனு அளித்தனர்.

ராமநாதபுரம், 

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய கலெக்டர் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மீதான மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்து பதிலளிக்க வேண்டும். இந்த மனுக்கள் மீது அதிகாரிகள் தாமதம் காட்டக்கூடாது. குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

மக்களின் குறைகளை தெரிவிப்பதற்காக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அதற்குரிய அதிகாரி வந்தால் தான் உரிய பதிலளிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியும். இதில் கவனக்குறைவாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில், மண்டபம் கேம்ப் அம்பேத்கர் நகரை சேர்ந்த தமிழ்புலிகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த நிலையில் அருகில் உள்ள முனைக்காடு பகுதியில் திடீரென மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எங்கள் பகுதியில் வழிபாட்டுத்தலங்கள் அமைந்துள்ளது.

மேலும், இந்த வழியாக பெண்கள், குழந்தைகள் சென்றுவர முடியாத நிலை ஏற்படும். எனவே, உடனடியாக மதுக்கடை அமைக்கும் முடிவை கைவிட்டு எங்களின் பாதுகாப்பிற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story