விழுப்புரம் அருகே, அரசு பள்ளிக்குள் புகுந்து பிளஸ்-2 மாணவர் மீது தாக்குதல்: பதற்றம்- போலீஸ் குவிப்பு
விழுப்புரம் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து பிளஸ்-2 மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கண்டமானடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும், பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிளஸ்-2 மாணவர், 10-ம் வகுப்பு மாணவரை தாக்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் உணவு இடைவேளை சமயத்தில் கண்டமானடி அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் விழுப்புரத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 15 பேர் புகுந்து, அந்த பிளஸ்-2 மாணவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். இதையறிந்த இரு தரப்பு மாணவர்களின் பெற்றோர்களும் கண்டமானடி பள்ளிக்கு திரண்டு வந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார், அந்த பள்ளிக்கு விரைந்து சென்று பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் 10-ம் வகுப்பு மாணவர், ஏற்கனவே தன்னை தாக்கிய பிளஸ்-2 மாணவரை பழிவாங்கும் நோக்கத்தில் விழுப்புரத்தை சேர்ந்த அரசு பள்ளிகளில் படிக்கும் தனது நண்பர்களை வரவழைத்து தாக்கியது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரச்சினைக்குரிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை போலீசார் வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். மாணவர்களுக்கிடையே உள்ள பிரச்சினை ஏற்கனவே பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிந்திருந்தும் அதை கண்டிக்க தவறியதால் மோதலாக மாறியுள்ளதாக சக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கண்டமானடியில் பதற்றம் நிலவியதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story