சின்னபொன்னேரி கிராமத்தில் தூர்வாரப்படாத ஏரிக்கு பணம் வழங்கியதாக மோசடி - பொதுமக்கள் புகார் மனு
சின்னபொன்னேரி கிராமத்தில் தூர்வாரப்படாத ஏரிக்கு பணம் வழங்கியதாக மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பத்தூரில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, தெருவிளக்கு, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிகளிடம், அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று மனுக்கள் பெற்றார். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
ஆம்பூர் தாலுகா பெரியங்குப்பம் கிராமத்தில் சாலை வசதி கேட்டு மனு கொடுத்தனர். கோனேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சர்மிளா என்பவருக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 5 வருடத்திற்கு முன்பு தங்கம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை பணம் வழங்கப்படவில்லை என்றும் மனு கொடுத்தார்.
திருப்பத்தூரை அடுத்த சின்னகம்மியம்பட்டு கிராமத்தில் கள்ளர் வட்டத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது, குரங்குகளை பிடிக்க வேண்டும், காவலூர் அருகே உள்ள வீரராகவன் வட்டத்தில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தனர்.
சின்னபொன்னேரி கிராமத்தில் உள்ள வாணிபன் ஏரி குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.3½ லட்சம் நிதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. பெயர் பலகையில் ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஏரியில் இதுவரை தூர்வாரப்படவில்லை. தூர்வாராத ஏரிக்கு பணம் அளித்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொது மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் இருந்து மொளகரம்பட்டி வரை உள்ள தார்சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக பெண்கள், கல்லூரி மாணவிகள், முதியவர்கள் சென்று வருகிறார்கள். அப்போது சிலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கல்லூரி முதல்வர் ரேனிசகாயராஜ் மனு அளித்தார். ஈமச்சடங்கு திட்டத்தின் கீழ் 3 பேருக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.51 ஆயிரத்தை மாவட்ட கலெக்டர் சிவன் அருள் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், அலுவலக மேலாளர் பாக்கியலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story