பள்ளியாடியில் கொத்தனாரை கொன்று தண்டவாளத்தில் வீச்சு: நண்பர் உள்பட 2 பேரை போலீஸ் தேடுகிறது


பள்ளியாடியில் கொத்தனாரை கொன்று தண்டவாளத்தில் வீச்சு: நண்பர் உள்பட 2 பேரை போலீஸ் தேடுகிறது
x
தினத்தந்தி 27 Jan 2020 10:45 PM GMT (Updated: 27 Jan 2020 9:12 PM GMT)

பள்ளியாடியில் கொத்தனாரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசியது தொடர்பாக நண்பர் உள்பட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில், 

தக்கலை அருகே பள்ளியாடி இலந்தையடிதட்டை சேர்ந்தவர் ஜாஸ்பின் ஜோஸ் (வயது 29), கொத்தனார். இவர் கடந்த 24-ந் தேதி அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார், ஜாஸ்பின் ஜோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். முன்னதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஜாஸ்பின் ஜோஸ் ரெயில் மோதி இறந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது ஜாஸ்பின் ஜோசை மர்ம நபர்கள் கொலை செய்து பிணத்தை தண்டவாளத்தில் வீசியது தெரியவந்தது. மர்ம நபர்கள் ஜாஸ்பின் ஜோசை கத்தியால் குத்தியும், தலையில் கொடூரமாக தாக்கியும் கொலை செய்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் கொலையாளிகள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் இன்னும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜாஸ்பின் ஜோஸ் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாளில் தன் சகோதரருடன் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது ஜாஸ்பின் ஜோசின் நண்பர் உள்பட 2 பேர் அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளனர். அதன்பிறகு மறுநாள் அவர் பிணமாக மீட்கப்பட்டு உள்ளார். எனவே அவருடைய நண்பர் உள்ளிட்ட 2 பேர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. தற்போது 2 பேரும் தலைமறைவாக உள்ளனர். எனவே அந்த 2 பேரையும் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஜாஸ்பின் ஜோசுக்கு, மோனிஷா (25) என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். ஜாஸ்பின் ஜோசுக்கு சொந்த ஊர் இலந்தையடி ஆகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் கஞ்சிகுழி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story