கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் - அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள்


கிராமப்புற அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் - அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 Jan 2020 4:26 AM IST (Updated: 28 Jan 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வில்லியனூர், 

புதுவை மாநிலம் ஏம்பலம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு ஆரம்பப்பள்ளி மாணவிகளுக்கும், ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நலத்துறை அமைச்சருமான கந்தசாமி கடந்த ஆண்டு தனது சொந்த நிதியிலிருந்து தங்கமகள் சேமிப்பு திட்டத்தில் சேர தலா ரூ.100 செலுத்தி சேமிப்பு கணக்கினை தொடங்கிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு ஏம்பலம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு ஆரம்பப் பள்ளி மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு தபால் துறை உதவியுடன் தனது சொந்த நிதியிலிருந்து சேமிப்பு கணக்கினை தொடங்கி தலா ரூ.100 டெபாசிட் செய்தார். அதற்கான கணக்கு புத்தகத்தினை மாணவ மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கோர்க்காடு அரசு ஆரம்பப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில தபால் துறை துணை கண்காணிப்பாளர் பிரபுசங்கர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், தங்க மகள் சேமிப்பு திட்டத்தில் வங்கி கணக்கில் வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட தபால் துறையில் கூடுதலான வட்டியை மத்திய அரசு வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் எளிதான முறையில் சிறு தொகை கூட செலுத்தி குழந்தைகளின் எதிர்காலத்தை திட்டமிட்டு செயல்படலாம் என்று கூறினார்.

நிகழ்ச்சியில்,மாணவர் களுக்கு சேமிப்பு கணக்கு புத்தகத்தை வழங்கி நலத்துறை அமைச்சர் கந்தசாமி பேசியதாவது;-

மாணவர்கள் தற்போது கிராமப்புறங்களில் குறைந்த அளவில் அரசு பள்ளியில் சேருகின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். மேலும் உயர் படிப்பு படிக்க நகரத்தை நோக்கி செல்ல அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதனை கருத்தில் கொண்டு நமது தொகுதியில் கிராமப்புற மக்கள் பயன்படும் வகையில் புதிய கல்லூரிகளை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆற்காடு பகுதியில் அரசு உறைவிடப்பள்ளி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி மாணவர்கள் நமது கல்வித் தரத்தை உயர்த்திக் கொண்டு இங்கு படிக்கும் மாணவ மாணவிகள் எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கோர்க்காடு அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story