உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி உள்பட 11 பேருக்கு பதவி கர்நாடக மந்திரிசபை நாளை விரிவாக்கம் இடைத்தேர்தலில் தோற்றவர்களுக்கு வாய்ப்பில்லை


உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி உள்பட 11 பேருக்கு பதவி கர்நாடக மந்திரிசபை நாளை விரிவாக்கம் இடைத்தேர்தலில் தோற்றவர்களுக்கு வாய்ப்பில்லை
x
தினத்தந்தி 27 Jan 2020 11:57 PM GMT (Updated: 27 Jan 2020 11:57 PM GMT)

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நாளை (புதன்கிழமை) நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி உள்பட 11 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்படுகிறது. இடைத்தேர்தலில் தோற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் முடிவடைந்ததும் மந்திரிசபை விரிவாக்கம் நடை பெறும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

ஆனால் இடைத்தேர்தல் முடிவடைந்து சுமார் 50 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவில்லை. மகர சங்கராந்தி பண்டிகைக்குள் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று எடியூரப்பா கூறினார். அதன்படியும் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவில்லை.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கத்தை நடத்துவதாக எடியூரப்பா கூறினார். ஆனால் பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்காததால், மந்திரி சபையை விரிவாக்கம் செய்யாமல் வெளிநாடு சென்றார். வெளிநாட்டு பயணம் முடிந்து கர்நாடகத்திற்கு திரும்பிய அவர் ஓரிரு நாளில் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று அறிவித்தார். ஏறத்தாழ தற்போது மந்திரிசபை விரிவாக்கம் நடை பெறுவதற்கான காலம் நெருங்கி வந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்-மந்திரி எடியூரப்பா, இந்த மாத இறுதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

ஒருவேளை இந்த மாத இறுதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறாவிட்டால், மேலும் 10 நாட்கள் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது. வருகிற பிப்ரவரி மாதம் 8-ந் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதன் பிறகே மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மந்திரிசபை விரிவாக்கத்தின்போது, இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் ரமேஷ் ஜார்கிகோளி, பி.சி.பட்டீல், மகேஷ் குமடள்ளி, ஆனந்த்சிங், நாராயணகவுடா, எஸ்.டி.சோமசேகர், கோபாலய்யா, பைரதி பசவராஜ், சுதாகர் ஆகிய 9 பேருக்கும், பா.ஜனதா மூத்த எம்.எல்.ஏ.க்கள் உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவளி ஆகிய 2 பேருக்கும் என மொத்தம் 11 பேருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இடைத்தேர்தலில் தோற்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 6 பேருக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளதாகவும், ஆனால் குறைந்தபட்சம் 9 பேருக்கு மந்திரி பதவி வழங்க அனுமதிக்குமாறு எடியூரப்பா கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறுவது தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா டெல்லி ெசல்ல மாட்டார் என்றும், மந்திரி பதவி பெயர் பட்டியல் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜே.பி.நட்டா அனுமதி வழங்கிய உடனேயே மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற உள்ளது. நாளை (புதன்கிழமை) நல்ல நாள் என்பதால், நாளைய தினமே மந்திரிசபை விரிவாக்கம் நடத்த எடியூரப்பா மிகுந்த ஆவலுடன் ஜே.பி.நட்டாவின் அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஹாசனில் நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“எனது மந்திரிசபை விரிவாக்கம் இந்த மாத இறுதிக்குள் நடைபெறும். இது தொடர்பான அனைத்து பணிகளும் அதற்குள் நிறைவடையும். நான் சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டேன். இந்த சுற்றுப்பயணம் நல்ல பயனை கொடுத்துள்ளது. கடைசியாக எஸ்.எம்.கிருஷ்ணா இந்த மாநாட்டில் பங்கேற்றார். அதற்கு பிறகு வேறு எந்த முதல்-மந்திரியும் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

40-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து, மாநிலத்தில் தொழில் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இதில் பெரிய அளவில் கர்நாடகத்தில் முதலீடு செய்வதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். இதனால் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வேலை வாய்ப்பு பெருகும். இந்த தொழில் திட்டங்களை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழில் வளர்ச்சியில் கர்நாடகம் பின்தங்கி இருப்பதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. இந்த நிலை வேகமாக மாறும். வருகிற மார்ச் மாதம் 5-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகி வருகிறேன். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். பெண்கள், குழந்தைகள் பயன் பெறும் திட்டங்களை அறிவிப்பேன்.” இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story