ஊரக புத்தாக்க திட்டத்தில் கிராமங்களில் தொழில்தொடங்க மானியத்துடன் வங்கி கடன் - கலெக்டர் தகவல்
ஊரக புத்தாக்க திட்டத்தில் கிராமங்களில் தொழில் தொடங்க, 30 சதவீத மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கிராமப்புறங்களில் தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில், ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 148 ஊராட்சிகளில், அந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் முதல்கட்டமாக 74 ஊராட்சிகளிலும், 2-வது கட்டமாக 74 ஊராட்சிகளிலும் திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக தொழில்முனைவோர் மற்றும் சமுதாய அமைப்பினர் பங்கேற்ற திட்ட விளக்க கூட்டம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள், தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் பேசியதாவது:-
கிராமங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதோடு கிராமப்புற தொழில்களையும் மேம்படுத்த வேண்டும். இதற்காக கிராமங்களில் தொழில் தொடங்க ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். இந்த திட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு 30 சதவீத மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படுகிறது.
இதில் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதன்மூலம் அவர்களை தொழில் முனைவோராக்க, தேவையான நிதி வழங்கப்படுகிறது. எனவே, ஊராட்சி ஒன்றியங்களில் வேளாண்மை, வேளாண்மை சாரா துறைகளை சேர்ந்த உற்பத்தியாளர்கள் இணைந்த குழுவினர், கூட்டமைப்பினர், தொழில்முனைவோர் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story