சேர்ந்து வாழ முடியாததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை


சேர்ந்து வாழ முடியாததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
x
தினத்தந்தி 29 Jan 2020 3:30 AM IST (Updated: 28 Jan 2020 8:21 PM IST)
t-max-icont-min-icon

சேர்ந்து வாழ முடியாததால் சிவகாசி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.

சிவகாசி,

சிவகாசி அனுப்பன்குளம் ஆண்டியாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வடிவேல்ராஜன் (வயது 42). இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். வடிவேல்ராஜன் சிவகாசியில் உள்ள ஒரு பள்ளியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசியில் உள்ள ஒரு பிரபல பட்டாசு ஆலையில் டிரைவராக வேலை செய்த போது என்.லட்சுமியாபுரத்தை சேர்ந்த வீரலட்சுமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வீரலட்சுமி கணவனை இழந்து குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

வடிவேல்ராஜன்-வீரலட்சுமி பழக்கம் வடிவேல்ராஜன் மகனுக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து உறவினர்கள் வடிவேல்ராஜனிடம் பேசி வீரலட்சுமியுடனான பழக்கத்தை நிறுத்திக்கொள்ள வலியுறுத்தினர். ஆனால் அதற்கு வடிவேல்ராஜன் தான் வீரலட்சுமியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், அதற்கு குடும்பத்தினர் சம்மதிக்க வேண்டும் என்றும், மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீரலட்சுமியுடன் சேர்ந்து வாழ முடியாமல் தவித்த அவர் வீட்டில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த வடிவேல்ராஜனின் கள்ளக்காதலி என்.லட்சுமியாபுரத்தில் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை மாரிமுத்து சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். வடிவேல்ராஜன் தற்கொலை தொடர்பாக அவரது மனைவி சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேர்ந்து வாழ முடியாததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story