கல்லட்டி நீர்வீழ்ச்சியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பலியான 2 வாலிபர்களின் உடல் மீட்பு


கல்லட்டி நீர்வீழ்ச்சியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பலியான 2 வாலிபர்களின் உடல் மீட்பு
x
தினத்தந்தி 28 Jan 2020 11:00 PM GMT (Updated: 28 Jan 2020 4:19 PM GMT)

கல்லட்டி நீர்வீழ்ச்சியில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பலியான 2 வாலிபர்களின் உடல் மீட்கப்பட்டது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு ஊட்டியை சேர்ந்த ஜிப்சன் (வயது 23), சுந்தர் ராஜ்(24), சாமுவேல்(23), பரத்(26), கணேசன்(23) ஆகியோருடன் திருப்பூரை சார்ந்த ஆனந்த(25), விஜய்குமார்(23) ஆகியோர் வந்தனர். இதில் கணேசன் மற்றும் சாமுவேல் ஆகியோர் நீர் வீழ்ச்சியில் குளிக்கச் சென்றனர். அப்போது அவர்கள் 2 பேரும் தண்ணீருக்குள் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தனர். இதில் ஆழமானபகுதிக்கு சென்றதால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் புதுமந்து போலீசார் மற்றும் ஊட்டி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரில் மூழ்கிய 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2 நாட்கள் தேடும் பணி நடந்தது. ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அரக்கோணத்தில் இருந்து மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 21 பேரும், தமிழக தீயணைப்பு துறையை சேர்ந்த ஸ்கூப்பா டைவிங் வீரர்கள் 10 பேரும் நேற்று கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு வரவழைக்கபட்டனர்.

நேற்று காலை ஊட்டி ஆர்.டி.ஓ. சுரே‌‌ஷ், நீலகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் இமானுவேல், தாசில்தார் ரவி, புதுமந்து இன்ஸ்பெக்டர் கமலகண்ணன், வனச்சரகர் பாண்டிராஜன் தலைமையிலான மீட்பு படையினர் 3-வது நாளாக மீட்பு பணியை தொடங்கினர். முன்னதாக தீயணைப்பு துறையை சார்ந்த ஸ்கூப்பா டைவிங் வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் நீர்வீழ்ச்சி அருகே உள்ள தண்ணீரில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு தேடும் பணி தொடங்கிய நிலையில் 11 மணி அளவில் கணேசனின் உடல் கண்டு பிடிக்கப்பட்டு பிணமாக மீட்கப்பட்டது. மேலும் சிறிது நேரத்தில் சாமுவேலின் உடலும் மீட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது வாலிபர்களின் உடல்களை பார்த்து அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட 2 வாலிபர்களின் உடல்களையும் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி ஆர்.டி.ஓ. சுரே‌‌ஷ் கூறும்போது, கல்லட்டி நீர்வீழ்ச்சியில் தண்ணீரில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்து உள்ளனர். இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது. மேலும், சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். என்றார்.

Next Story