கோடநாடு கொலை வழக்கு: ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்


கோடநாடு கொலை வழக்கு: ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 29 Jan 2020 4:00 AM IST (Updated: 28 Jan 2020 9:49 PM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை வழக்கில் ‌‌ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி அன்று காவலாளி ஓம்பிரகா‌‌ஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ‌‌ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோ‌‌ஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

‌‌ஷயான், மனோஜ் ஆகிய 2 பேர் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் ஊட்டி கோர்ட்டில் நேற்று கோடநாடு கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையில் இருந்து ‌‌ஷயான், மனோஜ் இருவரையும் போலீசார் ஊட்டி கோர்ட்டில் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். மற்ற 8 பேரும் கோர்ட்டுக்கு வந்து ஆஜரானார்கள். இதையடுத்து போலீஸ் தரப்பில் 2 சாட்சிகளை அழைத்து வந்திருப்பதாக அரசு வக்கீல் நீதிபதி வடமலையிடம் தெரிவித்தார்.

அப்போது எதிர்தரப்பு வக்கீல் ஆனந்த் இந்த வழக்கை முடிக்க வேண்டும், வழக்கில் இருந்து அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளதாக கூறினார். அரசு வக்கீல் நந்தகுமார் ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்கு வேறு, ஊட்டியில் நடக்கும் வழக்கு வேறு. மேற்கு வங்காளத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட 2 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். எதிர்தரப்பு வக்கீல் வழக்கு சம்பந்தமாக மனுத்தாக்கல் செய்வதாக கூறினார்.

இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை மதியத்துக்கு பின்னர் நடைபெறும் என்று தெரிவித்தார். மாலை 3 மணிக்கு விசாரணைக்கு வந்த போது, பஞ்சம் விஸ்வகர்மா, சுனில் தாபா ஆகிய 2 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு இந்தி தெரியும் என்பதால், இந்தி மொழிபெயர்ப்பாளராக பள்ளி ஆசிரியை வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்தரப்பு வக்கீல் இந்தி மொழி தெரிந்த மொழிபெயர்ப்பாளரும், மலையாளம் மொழிபெயர்ப்பாளரும் இருக்க வேண்டும், சாட்சிகளிடம் அடையாள அட்டைகள் சரியாக உள்ளனவா, உண்மையான சாட்சிகளா என்று கேட்டார். இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) நடைபெறும் என்றும், ‌‌ஷயான், மனோஜ் இருவரும் ஊட்டி கிளை சிறையில் பாதுகாப்பில் வைக்கும்படி நீதிபதி உத்தர விட்டார். 

Next Story