ஆனைமலை அருகே, ஊருக்குள் புகுந்த புலி கன்றுக்குட்டி, ஆடுகளை அடித்து கொன்றது - பொதுமக்கள் பீதி
ஆனைமலை அருகே அதிகாலையில் ஊருக்குள் புகுந்த புலி கன்றுக்குட்டி, 5 ஆடுகளை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஆனைமலை,
ஆனைமலையை அடுத்த சேத்துமடை அருகே உள்ள பழைய சர்க்கார்பதி பகுதியைச் சேர்ந்தவர் பொன்வித்யாசங்கர். விவசாயியான இவர் தனது தோட்டத்தில் விலை உயர்ந்த அசாம் ரக வெள்ளாடுகள், காங்கேயம் இன காளைகள், கன்று குட்டிகள் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். பொன்வித்யாசங்கர் நேற்று முன்தினம் மாலை குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டார். அவரது உறவினரான மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த அப்பாதுரை என்பவர் மட்டும் தோட்டத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் ஆடு கத்தும் சத்தம் கேட்டு அப்பாதுரை கொட்டகை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது புலி ஒன்று மின்னல் வேகத்தில் அங்கிருந்து பாய்ந்து அருகே இருந்த ஓடை வழியாக சென்றதைக்கண்டு அப்பாதுரை அதிர்ச்சி அடைந்தார். உடனே கொட்டகைக்கு வந்துபார்த்தபோது 5 ஆடுகள், காங்கேயம் இன கன்றுகுட்டியை புலி அடித்துகொன்றது தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அைடந்து உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து, பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் உள்ளிட்ட வனத்துறையினர் அந்த இடத்திற்கு வந்து ஆடுகள் இறந்து கிடந்ததை பார்வையிட்டனர்.
இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:-
கால்நடைகளை அடித்துக் கொன்றது புலி என்று அங்கிருந்த நபர் தெரிவத்து இருக்கிறார். இப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும் ஓடை, வாய்க்கால் உள்ளிட்ட நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் கால் நடைகளை நீர் நிலைகளை ஒட்டிய பகுதியில் வைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறோம்.
மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறந்த கால்நடைகளுக்கு சட்ட விதிகளின்படி இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story