திருச்சி பா.ஜ.க. நிர்வாகி கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் - அர்ஜூன் சம்பத் பேட்டி


திருச்சி பா.ஜ.க. நிர்வாகி கொலை வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் - அர்ஜூன் சம்பத் பேட்டி
x
தினத்தந்தி 28 Jan 2020 11:00 PM GMT (Updated: 28 Jan 2020 5:09 PM GMT)

திருச்சி பா.ஜ.க. நிர்வாகி கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

திருச்சி, 

திருச்சி பாலக்கரை பா.ஜ.க. மண்டல செயலாளர் விஜயரகு (வயது 39) நேற்று முன்தினம் அதிகாலை காந்திமார்க்கெட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் திருச்சி மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

பா.ஜ.க. நிர்வாகி விஜயரகு பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர் மிட்டாய் பாபு என்ற முகமது பாபு ஆவார். அவர் விஜயரகுவின் மகளை பல்வேறு வகையில் தொந்தரவு செய்து, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தியிருக்கிறார். இதனை விஜயரகுவின் குடும்பத்தினர் தட்டிக்கேட்டுள்ளனர். இதன் காரணமாக முகமது பாபு, விஜயரகுவை தாக்கியுள்ளார். இது தொடர்பாக 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது. தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என போலீசாரிடம் விஜயரகு குடும்பத்தினர் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர். போலீசார் முன்கூட்டியே பாதுகாப்பு வழங்கியிருந்தாலும், முகமது பாபு மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தாலும் இந்த படுகொலை சம்பவம் நடந்திருக்காது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக துண்டுபிரசுரங்களை காந்திமார்க்கெட்டில் விஜயரகு வழங்கிய இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலை சம்பவத்தை தனிப்பட்ட குடும்ப தகராறு என திசை திருப்ப வேண்டியதில்லை. இது ஒரு ‘லவ் ஜிகாத்’ தாக்குதலாக கூட இருக்கலாம். இந்த கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும். கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக செயல்படும் அ.தி.மு.க., பா.ஜ.க. நபர்கள் மீது தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. முஸ்லிம் மத அடிப்படைவாதிகள் ஊடுருவி உள்ளனர். இதற்கு பின்னணியில் முஸ்லிம் மத இயக்கங்கள் உள்ளன.

கொலை செய்யப்பட்ட விஜயரகு குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விஜயரகுவின் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை போலீசாரிடம் முன் வைத்து புகார் மனுவில் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிர்வாகிகள் உடன் இருந்தனர். மேலும் மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு உதவி கமி‌‌ஷனர் கபிலனிடம் புகார் மனுவை அளித்தனர். மனுவை பெற்ற அவர் கமி‌‌ஷனருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story