மாவட்ட செய்திகள்

திருச்சியில் பலூன் வியாபாரியை கொலை செய்த நண்பர் கைது - பரபரப்பு வாக்குமூலம் + "||" + Friend arrested for killing balloon dealer in Trichy

திருச்சியில் பலூன் வியாபாரியை கொலை செய்த நண்பர் கைது - பரபரப்பு வாக்குமூலம்

திருச்சியில் பலூன் வியாபாரியை கொலை செய்த நண்பர் கைது - பரபரப்பு வாக்குமூலம்
திருச்சியில் பலூன் வியாபாரியை கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மலைக்கோட்டை, 

திருச்சி தென்னூர் அண்ணாநகர் சின்னசாமி நகரை சேர்ந்தவர் முகமது இஸ்மாயிலின் மகன் முகமது இசாக் (வயது 21). இவர் பலூன் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சி மரக்கடை ராமகிரு‌‌ஷ்ணா பாலம் அருகே ஜலால்குதிரி தெருவில் மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தில் முகமது இசாக் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் கோட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

போலீசார் விசாரணையில், முகமது இசாக் கொலை செய்யப்பட்ட இடத்தில் அவரது நண்பரான திருச்சி ஜீவா நகரை சேர்ந்த நாகூர் ஹனிபா (வயது 20) இருந்ததும், அவர் அங்கிருந்து தப்பியோடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கோட்டை ரெயில் நிலையம் அருகே புதர் பகுதியில் மறைந்திருந்த நாகூர் ஹனிபாவை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் முகமது இசாக்கை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து நாகூர் ஹனிபாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோட்டை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

நானும் (நாகூர் ஹனிபா) முகமது இசாக்கும் ஒன்றாக கஞ்சா புகைப்போம். முகமது இசாக்கிற்கு செல்போன் திருடும் பழக்கம் இருந்து வந்தது. எனது அம்மா எனக்கு ஒரு செல்போன் வாங்கி கொடுத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த செல்போனை வைத்து நண்பர்களுடன் படம் பார்த்து கொண்டிருந்தபோது முகமது இசாக் அதனை பறித்து சென்றார். செல்போனை திருப்பி கேட்டபோது அவர் தர மறுத்தார். பலமுறை கேட்டும் எனது செல்போனை அவர் தரவில்லை.

இந்த நிலையில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நாங்கள் இருவரும் கஞ்சா புகைத்து கொண்டிருந்தோம். அப்போது எனது செல்போனை தருமாறு அவரிடம் கேட்டேன். அவர் தர மறுத்ததால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் நான் கத்தியால் முகமது இசாக்கை கழுத்தை அறுத்தும், முகத்தில் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பியோடினேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் கைதான நாகூர் ஹனிபாவுக்கு 17 வயது என முதலில் கூறப்பட்டது. அவரது பள்ளி படிப்பு சான்றிதழை போலீசார் சரி பார்த்தபின் அவருக்கு 20 வயது என்பது தெரிந்தது. முதலில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். அதன்பின் அவருக்கு 20 வயது என்பதால் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கைதான நாகூர் ஹனிபாவை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் கொலையான முகமது இசாக்கின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

திருச்சியில் நேற்று முன்தினம் அதிகாலை பா.ஜ.க. நிர்வாகி கொலை செய்யப்பட்ட நிலையில், இரவில் பலூன் வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இதில் பலூன் வியாபாரி கொலை வழக்கில் கொலையாளி உடனே கைது செய்யப்பட்டதால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.