சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்


சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்
x
தினத்தந்தி 29 Jan 2020 4:00 AM IST (Updated: 28 Jan 2020 10:43 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில், 

தமிழக அரசால் கடந்த 2013-2014-ம் ஆண்டு விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்அடிப்படையில் நடப்பாண்டில் ரூ.29 கோடியே 94 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றும், இத்திட்டம் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களிடம் உள்ள விவசாய பம்புசெட்டுகளுக்கு ஏற்கனவே இலவச விவசாய மின் இணைப்பு பெற்றிருந்தால் சூரிய சக்தி பம்புசெட் கிடைக்கும் நிலையில் ஏற்கனவே உள்ள இலவச மின் இணைப்பை துண்டிப்பதற்கு விருப்பம் தெரிவித்து அதற்கான கடிதம் வழங்க வேண்டும். இலவச விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பம் செய்து, மின் இணைப்பு பெற காத்திருக்கும் விவசாயிகள், சூரிய சக்தி பம்புசெட் கிடைக்கும் நிலையில் மின்வாரிய விண்ணப்ப ரசீதை விண்ணப்பங்களுடன் இணைத்து அதற்கான வாபஸ் கடிதம் அனுப்ப வேண்டும்.

குறிப்பாக திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் எடுக்கவும், இத்திட்டத்தின்கீழ் சூரிய சக்தி பம்புசெட் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். வேளாண்மை பொறியியல் துறையின் அனுமதி கடிதம் கிடைக்கப்பெற்ற உடன் விவசாயிகள் தேர்வு செய்த பம்பு செட்டின் விலையில் 10 சதவீதம் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் கேட்பு வரைவோலை மூலமாக வேளாண்மை பொறியியல் துறையில் வழங்க வேண்டும். பம்புசெட் பொருத்திய பின்னர் அதன் செயல்பாட்டினை உறுதி செய்து, அதன்பிறகு 90 சதவீதம் மானியத்தொகை வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக 2014- 2015-ம் ஆண்டு முதல் 2016- 2017-ம் ஆண்டு வரை சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் 80 சதவீத மானியத்தில் 52 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடி மானியத்திலும், 2017- 2018-ம் ஆண்டு முதல் 2018- 2019-ம் ஆண்டு வரை 90 சதவீத மானியத்தில் 49 பயனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மானியத்திலும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே மானிய விலையில் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட் அமைக்க விரும்பும் விவசாயிகள் உடனடியாக நாகர்கோவில், கோணம் தொழிற்பேட்டை வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் (போன் எண் 04652- 260181) மற்றும் தக்கலை மேட்டுக்கடையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் (போன் எண் 04651- 250181) ஆகியோரிடம் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

Next Story