துக்கவீட்டுக்கு வந்த இடத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - நகை தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
நாமக்கல்லில் துக்க வீட்டுக்கு வந்த இடத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நகை தொழிலாளி மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்,
கோவை மாவட்டம் பச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் திருஞானம் (வயது 59). நகை தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருஞானம் தனது உறவினர்களுடன் நாமக்கல் வந்திருந்தார். இங்கு தங்கி இருந்த திருஞானம் நேற்று உறவினர் வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்த 4 வயது சிறுமியை தூக்கி மடியில் வைத்து கொண்டு, அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் சொல்லி அழுது உள்ளாள். இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி முதியவர் திருஞானம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே திருஞானம் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு சேர்ந்து உள்ளார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவர் தப்பி செல்லாமல் இருக்க அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படும் பட்சத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து நகை தொழிலாளி சிக்கி கொண்ட சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story