ஓட்டப்பிடாரம் அருகே, இழப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஓட்டப்பிடாரம் அருகே இழப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
ஓட்டப்பிடாரம் அருகே சீமைப்பட்டி பகுதியில், சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தனியார் மின்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை பரிவல்லிக்கோட்டையில் உள்ள மின்நிலையத்துக்கு கொண்டு செல்வதற்காக உயர்அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மின்கம்பிகள் வயல்கள் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக அந்த பகுதி மக்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் இழப்பீடு தொகை காசோலையாக வழங்கப்பட்டது. ஆனால் அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியதாக கூறப்படுகிறது.
நேற்று அந்த தனியார் நிறுவனம் அறுவடைக்கு தயாரான பயிர்கள் இருந்த வயல்கள் வழியே மின்கம்பியை இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயிர்கள் சேதம் அடைந்தன. இதையடுத்து விவசாயிகள், அவர்களை பணி செய்யவிடாமல் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், பயிர் அறுவடை முடிந்த பிறகு மின்கம்பியை இழுக்க வேண்டும், இழப்பீடாக வழங்கப்பட்ட காசோலை திரும்பி விட்டதால், பணமாக வழங்க வேண்டும், இழப்பீடு வழங்கப்படாதவர்களுக்கும் விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சண்முகையா எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அங்கு அவரும் விவசாயிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகு, மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஜெயசீலன், ஞானராஜ் ஆகியோர் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story