மகசூலை அதிகரிக்க துத்தநாக சத்து அவசியம் நெல் பயிருக்கு 50 சதவீத மானியத்தில் நுண்ணூட்ட உரம் - நெல்லை கலெக்டர் ஷில்பா தகவல்


மகசூலை அதிகரிக்க துத்தநாக சத்து அவசியம் நெல் பயிருக்கு 50 சதவீத மானியத்தில் நுண்ணூட்ட உரம் - நெல்லை கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 29 Jan 2020 3:15 AM IST (Updated: 29 Jan 2020 2:05 AM IST)
t-max-icont-min-icon

நெல் பயிரில் மகசூலை அதிகரிக்க நுண்ணூட்ட சத்துகள் அளிக்க வேண்டும், இதற்கு 50 சதவீத மானியத்தில் நுண்ணூட்ட உரம் வழங்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் அதிக விளைச்சல் பெறுவதற்கு ரசாயன உரங்கள் மட்டுமே பெரும்பாலான விவசாயிகளால் அளிக்கப்படுகிறது. மேலும் ரசாயன உரங்களில் பேரூட்டச் சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் நுண்ணூட்டச் சத்துகளை அதிலும் குறிப்பாக சிங் சல்போட் எனப்படும் துத்தநாக சத்தினை பெரும்பாலான விவசாயிகள் அளிப்பதில்லை. நெல் விளைச்சலில் துத்தநாக சத்தின் பங்கானது மிகவும் முக்கியமானது ஆகும். நெல் பயிரில் பச்சையம் உருவாவது தொடங்கி பல்வேறு உயிர்வேதி விளைகளில் துத்தநாகம் உதவி புரிகிறது. துத்தநாகம் அளிக்க இயலாத சூழ்நிலையில் விளைச்சலில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.

துத்தநாக சத்தின் குறைபாடு காணப்படுவதற்கான அதிக காரத்தன்மை கொண்ட மண்ணில் தொடர்ந்து வயலில் நீர் தேக்கி வைப்பது, பாசன நீரில் அதிக அளவு பைகார்பனேட் உப்பு அளவு இருத்தல் காரணம் ஆகும். மேலும் அதிக அளவு மணிச்சத்து உரங்களை வயலில் இடுதல், தழைச்சத்து உரமாக தொடர்ந்து யூரியா பயன்படுத்தப்படுவது, தொடர்ந்து நெற்பயிரையே சாகுபடி செய்வதால் மண்ணிலுள்ள துத்தநாகச் சத்தினை பயிர்கள் எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பற்றாக்குறை மற்றும் களர் நிலங்கள், மணிச்சத்து அதிகமாக உள்ள நிலங்கள், சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள மண் ஆகிய நிலங்களில் துத்தநாக சத்து பயிர்களுக்கு கிடைப்பதில்லை.

இந்த பற்றாக்குறையின் அறிகுறிகள் நெல் நடவு செய்த இரண்டு முதல் 4 வாரங்களுக்குள் தென்படும். பாதிக்கப்பட்ட நெற்பயிரின் இளம் இலைகளின் மைய நரம்பில் வெள்ளை நிறக் கோடுகள் தோன்றும். பின்னர், பழுப்பு நிறக்கோடுகளாக மாறிவிடும். இதனால் பயிர்களின் வளர்ச்சி குன்றிக் காணப்படும்.

இதை சரிசெய்ய ஒரு ஏக்கருக்கு 10 கிலோ சிங் சல்பேட் உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும் அல்லது ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்ட உரத்தினை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும். நெல் நுண்ணூட்ட உரம் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை விவசாயிகள் பெற்று பயன் அடையலாம்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Next Story