பேரையூர் தாலுகாவில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் - தாசில்தாரிடம் வலியுறுத்தல்


பேரையூர் தாலுகாவில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் - தாசில்தாரிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Jan 2020 3:00 AM IST (Updated: 29 Jan 2020 2:24 AM IST)
t-max-icont-min-icon

பேரையூர் தாலுகாவில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தாசில்தாரிடம் நேரில் வலியுறுத்தினர்.

பேரையூர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சேடபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயபால் மற்றும் விவசாயிகள் பேரையூர் தாசில்தார் சாந்தியை நேரில் சந்தித்து விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் அவர்கள் கூறியதாவது:- பேரையூர் தாலுகாவில் கடந்த சில மாதங்களாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வில்லை. எனவே கூட்டத்தை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரையூர் தாலுகாவில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு இதுவரை வனத்துறையினர் நிவாரணம் வழங்கவில்லை. மேலும் கடந்த வருடம் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு இது வரை இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

தாலுகாவில் உள்ள பல்வேறு கூட்டுறவு வேளாண்மை வங்கிகளில் சமீபத்தில் அறுவடை செய்த நெல் மற்றும் மக்காச்சோளம் மூடைகளை பெரும்பாலான வியாபாரிகள் உரிய ஆவணம் இல்லாமல் அடமானம் வைக்கின்றனர். இதன் பலனை வியாபாரிகள் மட்டும் அனுபவிக்கும் நிலை உள்ளது.

இதில் முறைகேடு நடக்காமல் தடுக்க வேண்டும். வரும் காலங்களில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்களில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேரையூர் தாலுகா பகுதியில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தாசில்தாரிடம் வலியுறுத்தினர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய சங்கத்தினரிடம் தாசில்தார் உறுதி அளித்தார்.

Next Story