பெங்களூரு நகர்-புறநகர் பகுதியை சேர்ந்த ஏழை மக்கள் 10 ஆயிரம் பேருக்கு நில உரிமை பத்திரம் முதல்-மந்திரி எடியூரப்பா வழங்கினார்


பெங்களூரு நகர்-புறநகர் பகுதியை சேர்ந்த ஏழை மக்கள் 10 ஆயிரம் பேருக்கு நில உரிமை பத்திரம் முதல்-மந்திரி எடியூரப்பா வழங்கினார்
x
தினத்தந்தி 29 Jan 2020 5:00 AM IST (Updated: 29 Jan 2020 2:35 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு நகர்-புறநகர் மாவட்டங்களை சேர்ந்த ஏழை-எளிய மக்கள் 10 ஆயிரம் பேருக்கு நில உரிமை பத்திரங்களை பெங்களூருவில் நடந்த விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா வழங்கினார்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் வருவாய்த்துறை சார்பில் முதல் கட்டமாக அரசு நிலத்தில் வீடுகளை கட்டிய ஏழை மக்கள் 10 ஆயிரம் பேருக்கு நில உரிமை பத்திரம் வழங்கும் விழா பெங்களூரு நேஷனல் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு நில உரிமை பத்திரத்தை வழங்கி பேசும்போது கூறிய தாவது:-

“பெங்களூரு நகர மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டத்தில் அரசு நிலத்தில் வீடுகளை கட்டியுள்ள 10 ஆயிரம் பேருக்கு இன்று (நேற்று) நில உரிமை பத்திரம் வழங்கப்படுகிறது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வருவாய்த்துறை, பிற துறைகள் அனைத்திற்கும் தாய் துறையை போன்றது. மக்களின் நலனுக்காக இந்த துறை செயலாற்றி வருகிறது. அந்த துறை மூலம் மாநில அரசு முக்கியமான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

கர்நாடக நில வருவாய் சட்டத்தில் 94 (சி), 94(சிசி) ஆகிய பிரிவுகளின் கீழ் ‘அக்ரம-சக்ரம’ திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இந்த திட்டத்தில் அரசு நிலத்தில் வீடுகளை கட்டியுள்ள ஏழை மக்களுக்கு அவற்றின் உரிமை பத்திரத்தை வழங்குகிறோம்.

கிராமப்புறங்களில் அதிகபட்சமாக 4,000 சதுரஅடி நிலத்தில் வீடுகளை கட்டியுள்ள ஏழைமக்களுக்கு அவற்றின் உரிமை பத்திரம் வழங்குகிறோம். பெங்களூரு நகருக்குள் 600 சதுரஅடி நிலத்தில் வீடு கட்டியுள்ள ஏழைகள் மற்றும் பெங்களூரு நகர எல்லையில் இருந்து 18 கிலோ மீட்டர் நீளத்திற்குள் 1,200 சதுர அடியில் வீடுகள் கட்டியுள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உரிமை பத்திரம் வழங்குகிறோம்.

இன்றைய தினம் பெங்களூரு நகர மாவட்டத்தில் 9 ஆயிரம் பேருக்கும், பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் 1,000 பேருக்கும் என மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு நில உரிமை பத்திரம் வழங்குகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்பது எனது கனவு. இந்த நில உரிமை பத்திரம் வழங்கும் திட்டத்தில் அரசு அதிகாரிகள் யாரும் லஞ்சம் வாங்கக்கூடாது.

லஞ்சம் வாங்கியதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்களின் இந்த சாதனை குறித்து மக்கள் பேசிக்கொள்ள வேண்டும். நாங்கள் பேச மாட்டோம். எங்கள் சாதனையை மக்கள் பேச வேண்டும். இன்னும் 6 மாதங்களில் பெங்களூருவின் வரைபடமே மாறும். அந்த அளவுக்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். பெங்களூருவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலம் மீட்கப்படும். இதற்காக கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளோம்.” இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த விழாவில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

Next Story