அரியாங்குப்பத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு ‘சீல்’


அரியாங்குப்பத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 29 Jan 2020 3:55 AM IST (Updated: 29 Jan 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட பட்டாசு ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் அடுத்த மாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது53). இவரது வீட்டிற்கு அருகே பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழில் கூடம் ஒன்று செயல்பட்டு வந்தது. அதற்கு உரிய அனுமதியும் லைசென்சும் பெறாமல் இருந்ததாகவும் குடியிருப்புக்கு மத்தியில் அந்த தொழிற்சாலை செயல்படுவதாகவும் தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதனை தொடர்ந்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தரராஜன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை அந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த தொழில் கூடத்தினை ஞானசேகர் நடத்தி வருவது தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணங்களை காண்பிக்குமாறு அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர் எவ்வித அனுமதியும் இல்லை, உரிமமும் பெறவில்லை என கூறினார்.

அதைத்தொடர்ந்து அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அந்த தொழில் கூடத்திற்கு அதிரடியாக ‘சீல்’ வைக்கப்பட்டது. உரிய அனுமதி பெற்ற பிறகு இந்த தொழில் கூடம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Next Story