பெரியகுளம் அருகே, 2 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு : சிறுவன் உள்பட 8 பேர் கைது
பெரியகுளம் அருகே இருசமூகத்தினர் மோதலில் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம்,
பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருசமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இருசமூகத்தை சேர்ந்தவர்கள் கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் ஒருசமூகத்தை சேர்ந்த ஜெயபால் (வயது 55) என்பவரும், மற்றொரு சமூகத்தை சேர்ந்த பெருமாள் (70) என்பவரும் இறந்தனர். இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் மேற்கொண்டு நடைபெறாமல் இருப்பதை தடுப்பதற்காக கைலாசப்பட்டி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இருசமூகத்தை சேர்ந்தவர்களும் இருவேறு புகார்களை போலீசாரிடம் அளித்தனர். அதன் அடிப்படையில் இருதரப்பையும் சேர்ந்த 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் இறந்துபோன பெருமாள் தரப்பினரான கைலாசப்பட்டியை சேர்ந்த அருள்முருகன் (வயது 25), சிவக்குமார் (29), சுரேந்தர்(25), செல்வக்குமார் (33), நாகராஜ் (45), ராதாகிருஷ்ணன் (39), முருகன்(39) மற்றும் 17 வயது சிறுவன் என மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை பெரியகுளம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். பிடிபட்ட சிறுவனை மதுரையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story