ராஜபாளையத்தில், தீயில் பந்தல் பொருட்கள் எரிந்து நாசம்


ராஜபாளையத்தில், தீயில் பந்தல் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 30 Jan 2020 3:45 AM IST (Updated: 29 Jan 2020 6:55 PM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் பந்தல் பொருட்கள் வைத்திருந்த கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாயின.

ராஜபாளையம்,

ராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகிழம்பூ. இவர் தென்காசி சாலையில் பெரிய மாரியம்மன் கோவில் எதிரே உள்ள திருமண மண்டபத்தோடு இணைந்த கடையில் சுப நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைக்கும் பொருட்களை வைத்திருந்தார். சில பொருட்களை அறையின் உள் பகுதியில் வைத்திருக்கும் இவர், பந்தல் அமைக்க பயனபடுத்தும் மூங்கில் மற்றும் சவுக்கு கம்புகள், தகர தடுப்புகள் மற்றும் தென்னை ஓலைகளை அறையின் வெளிப் பகுதியில் அடுக்கி வைத்திருந்தார்.

நேற்று அதிகாலை, இந்த கம்பு குவியல்களில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராம் தலைமையில் 5 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆனால் அவர்கள் வருவதற்குள் கடையின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி மூங்கில் கம்புகளில் பற்றி எரிந்த தீயை கட்டுப்படுத்தினர்.

அப்போது தீ விபத்து நடந்த இடத்துக்குள் ஒருவர் சிக்கி இருப்பதாக அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே இருந்த முருகன் என்பவரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அவர் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

அந்தப்பகுதியில் மின் வயர்கள் எதுவும் இல்லை என்பதால், யாரேனும் திட்டமிட்டு பந்தல் பொருட்களுக்கு தீ வைத்திருக்கலாம் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story