சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருட்டு
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டியிடம் 3 பவுன் நகையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம்,
சேலம் பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் 2–வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் பார்வதி (வயது 70). இவர், மாதந்தோறும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ரத்த அழுத்தத்திற்கு (பிரஷர்) மாத்திரை வாங்கி செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மருந்து வாங்கும் இடத்தில் அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர், வந்து மூதாட்டி பார்வதியிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார்.
பின்னர் அவர் தமிழக அரசு வயதானவர்களுக்கு மாதம் ரூ.1,000 மற்றும் 3 பவுன் நகை வழங்க உள்ளதாகவும், அதனை நான் உங்களுக்கு வாங்கி தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். அப்போது, மூதாட்டி பார்வதி அருகில் இருந்த மற்றொரு பெண் அதை கேட்டு கொண்டிருந்தார். இதனை கவனித்த மர்ம நபர், அந்த பெண்ணிடம் மாத்திரை வாங்குவதற்கு சீக்கிரம் போங்கம்மா என்று அவரிடம் நைசாக கூறி அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண் மாத்திரை வாங்கிவிட்டு திரும்பி வந்தபோது, மூதாட்டி பார்வதி மயங்கிய நிலையில் கீழே படுத்திருந்தார். பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது, அந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதனால் கண்ணீர் விட்டு கதறிய பார்வதி, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் 3 பவுன் நகை திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story