கிராமப்புற இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வரவேண்டும் - கலெக்டர் ஜெயகாந்தன் பேச்சு
கிராமப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு முன் வரவேண்டும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு சிறு, நடுத்தர தொழில்களுக்கான தரச்சான்று குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டம் சிவகங்கையில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் தேவராஜ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:–
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் வேளாண்மை தொழிலை மட்டும் பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். தற்போதைய நிலையில் குறைந்தளவு தண்ணீரை பயன்படுத்தி அதிகளவில் மகசூல் பெறக்கூடிய சிறு தானியங்களை விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிரிட அரசு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி, சாமை, திணை உள்ளிட்ட சிறு தானியங்கள் அதிகளவு விளை விக்கப்படுகிறது. ஆனால் அவற்றை சந்தைப்படுத்துவதற்கு விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகள் தான் இன்றைய ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்ற உணவாக விளங்கி வருவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது. எனவே விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்து அதை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கு அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்.
இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகஅளவில் உருவாக்கப்படுவது மட்டுமல்லாமல் உற்பத்தி சார்ந்த தொழில் கட்டமைப்பும் மேம்படுத்தப்படும். இதற்கு அனைத்து வகையான உதவிகளை வங்கி மூலமாக மாவட்ட நிர்வாகம் வழங்கும். மேலும் தொழில் முனைவோர்களுக்கு ஆரம்ப நிலையில் ஏற்படும் தயக்கம் மற்றும் இடர்பாடுகளை மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பயிற்சி வழங்கி தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இன்றைய போட்டி உலகில் வேலைவாய்ப்பு என்பது அரிதாகி வருகிறது. எனவே கிராமப்புறத்தில் வசிக்கும் இளைஞர்கள் கல்வி கற்பதுடன் நின்று விடாமல் விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் தொழில் தொடங்குவதற்கு முன் வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் கணேசன் திட்ட விளக்க உரையாற்றினார். சென்னையில் உள்ள இந்திய தரக்கட்பாடு நிறுவனத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன், குறு சிறு, நடுத்தர வளர்ச்சி நிறுவனங்களின் உதவி இயக்குநர் உமாசந்திரிகா, தரச்சான்று ஆலோசகர் சுரேஷ்நாதன், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழக கிளை மேலாளர் கண்ணன் ஆகியோர் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் தொழில் முனைவோர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் உதவி இயக்குநர் தாண்டவன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story