கெங்கவல்லி அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி - 39 பேர் படுகாயம்


கெங்கவல்லி அருகே, சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி - 39 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Jan 2020 10:45 PM GMT (Updated: 29 Jan 2020 2:50 PM GMT)

கெங்கவல்லி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலியானார். மேலும் இந்த விபத்தில் 39 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

கெங்கவல்லி,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி வடக்கு தெரு பகுதியை சேர்ந்த 40 பேர் சரக்கு ஆட்டோவில் தலைவாசல் அருகே உள்ள வெள்ளையூருக்கு நேற்று காலை 8 மணியளவில் புறப்பட்டனர். வெள்ளையூரில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பருத்தி பஞ்சு எடுப்பதற்காக இந்த தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். சரக்கு ஆட்டோவை காட்டு ராஜா (வயது 32) என்பவர் ஓட்டிச்சென்றார்.

இலுப்புதோப்பு கவுண்டர் தோட்டம் என்ற பகுதியில் சென்றபோது மற்றொரு சரக்கு ஆட்டோ திடீரென காட்டு ராஜா ஓட்டிசென்ற சரக்கு ஆட்டோவை முந்திச்சென்றது. இதனால்  நிலை தடுமாறி திடீர் பிரேக் போட்டதால் சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனால் அதில் பயணம் செய்த சுசீலா (65), மல்லிகா (30), காமாட்சி (47), உண்ணாமலை (70), சாந்தி (50), பார்வதி (50), மணி (45),செல்வி (54), லட்சுமி (54), சோலையம்மாள் (35) உள்பட 40 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அவர்களை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து 16 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுசீலா பரிதாபமாக இறந்தார்.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுபற்றி கெங்கவல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆண்டவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆட்டோ டிரைவர் காட்டுராஜா தலைமறைவானார்.

சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கள்ளக்குறிச்சி கவுதம சிகாமணி எம்.பி. ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Story