புத்தாக்க திட்டத்தில் 30 சதவீத மானியத்தில் கடன் - கலெக்டர் தகவல்
புத்தாக்க திட்டத்தில் 30 சதவீத மானியத்தில் கடன்வழங்கப்படும் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
குளித்தலை,
குளித்தலை வட்டத்திற்குட்பட்ட வைகைநல்லூர் ஊராட்சியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் நிறைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, 110 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பொதுமக்கள் ஒவ்வொருவரும் இங்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத்துறை அரங்குகளை பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை கேட்டறிந்து உங்களுக்கு எந்த வகையில் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெற வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.
பொதுமக்கள் வீடுகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை முழுமையாக மூடிவைக்க வேண்டும். சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் டெங்கு கொசுக்கள் உருவாகாமல் இருக்கும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நில வேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. அதை பொதுமக்கள் வாங்கி பருகவேண்டும். மேலும் குடற்புழு நீக்க மாத்திரைகள் விலையில்லாமல் அரசு மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது. இதை அனைவரும் மருத்துவரின் ஆலோசனைப்படி வாங்கி உட்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் எது என சொல்லிக்கொடுக்க வேண்டும்.
புதிதாக தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு 30 சதவீத மானிய உதவியுடன் கடன் வழங்க தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத்திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் நபர்கள் சுயஉதவிக்குழு உறுப்பினராகவோ, அல்லது சுயஉதவிக்குழு உறுப்பினராக உள்ளவரின் உறவினராகவோ இருத்தல் வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு விளக்கக் கையேட்டினை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார். பின்னர் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 10 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கண் கண்ணாடி வழங்கினார்.
இதில், குளித்தலை உதவி கலெக்டர் ஷேக்அப்துல்ரகுமான், சமூகப்பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், குளித்தலை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் விஜயவிநாயகம், துணைத் தலைவர் இளங்கோவன், வைகைநல்லூர் ஊராட்சிமன்றத்தலைவர் சுமதி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story