குடியாத்தம் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டத்தை விரட்ட வனத்துறையினர் காட்டில் முகாம்
குடியாத்தம் வனப்பகுதியில் உள்ள யானைகள் கூட்டத்தை விரட்ட வனத்துறையினர் காட்டில் முகாமிட்டுள்ளனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, மோடிகுப்பம், தனகொண்டபல்லி, கல்லப்பாடி அருகே அனுப்பு உள்ளிட்ட பகுதி வனப்பகுதியை ஒட்டியபடி உள்ளது. இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களில் அடிக்கடி காட்டு யானைகள் மற்றும் மான்கள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் இப்பகுதியை ஒட்டியபடி ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் கவுண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது. அங்கிருந்தும் யானைகள் தமிழக எல்லைக்குள் வந்து கிராமப்புற பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துகிறது.
கடந்த சில நாட்களாக 20-க்கும் மேற்பட்ட யானைகள் பயிர்களை நாசம் செய்து வந்தது. தனகொண்டபல்லியை அடுத்த மேல்கொல்லப்பல்லி மற்றும் கல்லப்பாடியை அடுத்த கதிர்குளம் பகுதியில் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு யானைகளை வனத்துறையினர் விரட்டினர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்த பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.லோகநாதன் யானைகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் மாவட்ட கலெக்டர் ஆ.சண்முகசுந்தரம் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகளை கேட்டு கொண்டார். இதனையடுத்து மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின் பேரில் மண்டல வனபாதுகாவலர் சேவாசிங், மாவட்ட வன அலுவலர் பார்கவ்தேஜா ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் (பொறுப்பு) பாலாஜி மேற்பார்வையில் குடியாத்தம், பேரணாம்பட்டு, ஒடுகத்தூர் பகுதிகளை சேர்ந்த வனவர் பிரகாஷ், வனக்காப்பாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட 10 பேர் கொண்ட ஒரு குழுவும், வனவர் அருள்தாஸ், வனக்காப்பாளர் பிரபு உள்ளிட்ட 10 பேர் கொண்ட மற்றொரு குழுவும் 10 நாட்களுக்கு தொடர்ந்து தனகொண்டபல்லி, சைனகுண்டா உள்ளிட்ட வனப்பகுதிகளில் முகாமிட்டு, பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை ஆந்திர மாநில அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story