ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - முத்தரசன் வேண்டுகோள்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - முத்தரசன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 Jan 2020 3:30 AM IST (Updated: 29 Jan 2020 11:30 PM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த மாட்டோம் என மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக தற்போது அதனை செயல்படுத்துவதற்கு மக்கள் கருத்துகளை, சுற்றுச்சூழல் அனுமதி ஆகியவற்றின் ஒப்புதல் பெற தேவையில்லை என கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

இதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறுவது மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய மதிப்பளிக்க வேண்டும். எனவே டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நல்ல மழை பெய்ததால் தமிழ்நாடு முழுவதும் நெற்பயிர் நல்ல விளைச்சல் பெற்றுள்ளது.

அதிலும் குறிப்பாக திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் நல்ல விளைச்சல் பெற்றாலும், மழையின் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அறுவடை எந்திரம் போதுமான அளவு இல்லை. எனவே அறுவடை எந்திர தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகையான், வெட்டுக்கிளியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆதலால் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு இன்னும் நிவாரணத்தொகை கிடைக்கவில்லை. எனவே அனைவருக்கும் நிவாரணத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story