4 குழந்தைகளின் தந்தை மர்மச்சாவு; உறவினர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
4 குழந்தைகளின் தந்தை மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதமானதால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்,
ஆண்டிமடத்தை அடுத்த கூவத்தூர் கிராமம் மடத்துத்தெருவில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது, கிணற்றில் ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டு இருந்தது.இதையடுத்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் ஜெயங்கொண்டம் கிழக்கு தெருவை சேர்ந்த ராஜா(வயது 36) என்றும், இவர் ஆண்டிமடம் அருகே ஸ்ரீராமன் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பகுதிநேர விற்பனையாளராக இருந்து வந்ததும் தெரிய வந்தது. இவருக்கு கவுரி என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீட்டிற்கு வரவில்லை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ராஜாவின் உடல் நேற்று மாலை 5 மணி வரை பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜாவின் உறவினர்கள் ராஜாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் செய்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்தும், ராஜாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் கூறி, உறவினர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு உள்ள ஜெயங்கொண்டம்- தா.பழூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேஷ்பாபு, ரமேஷ்பாபு, சாமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார் ராஜாவின் சாவு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஜெயங்கொண்டம்- தா.பழூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story