பெண்ணின் கையை பிடித்து இழுத்ததால், விவசாயி அடித்துக்கொலை - கட்டிட மேஸ்திரி கைது


பெண்ணின் கையை பிடித்து இழுத்ததால், விவசாயி அடித்துக்கொலை - கட்டிட மேஸ்திரி கைது
x
தினத்தந்தி 29 Jan 2020 10:15 PM GMT (Updated: 29 Jan 2020 7:08 PM GMT)

பொம்மிடி அருகே பெண்ணின் கையை பிடித்து இழுத்ததால் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள வாசிகவுண்டனூரை சேர்ந்தவர் குமார் (வயது 45). விவசாயியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதேபகுதியை சேர்ந்தவர் ரமே‌‌ஷ் (28). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்ப செலவுக்காக குமாரிடம் ரூ.48 ஆயிரம் கடன் வாங்கினார். இந்த பணத்தை சில வாரங்களுக்கு முன்பு ரமே‌‌ஷ் திருப்பி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் குமார், பணம் கொடுக்கவில்லை என கூறி வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் ரமே‌‌ஷ் பணம் கொடுக்கவில்லை என்று கூறி அவருடைய மோட்டார் சைக்கிளை குமார் எடுத்து சென்று விட்டார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு குமார், ரமே‌‌ஷ் வீட்டுக்கு இரும்பு பைப்புடன் சென்று பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ரமேசின் மனைவியின் கையை பிடித்து குமார் இழுத்து மானபங்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரமே‌‌ஷ், இரும்பு பைப்பை பறித்து குமாரின் தலையில் அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையறிந்த ரமே‌‌ஷ் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் வாசிகவுண்டனூர் கிராமத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் வழக்குப்பதிவு செய்து கட்டிட மேஸ்திரி ரமேசை கைது செய்தார். பெண்ணின் கையை பிடித்து இழுத்ததால் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story