தாவணகெரே அருகே, கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட மேலும் 10 பேர் கைது
தாவணகெரே அருகே கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட மேலும் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு,
தாவணகெரே மாவட்டம் அரப்பனஹள்ளி தாலுகா உழுவாகிலு, அமரநாத்புரா கிராமங்களில் கடந்த 2013-ம் ஆண்டு கடைகள், ஓட்டல்களில் மர்மநபர்கள் கள்ள நோட்டுகளை கொடுத்து பொருட்கள், உணவு வாங்கி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் அரப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது கள்ளநோட்டுகளை கடைகளில் கொடுத்து பொருட்களை வாங்கி சென்றது உழுவாகிலு கிராமத்தை சேர்ந்த புத்தப்பா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 100, 200, 500, 2,000 ரூபாய் கள்ளநோட்டுகளை தயாரித்து அதை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் புத்தப்பா கைதானது பற்றி அறிந்ததும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் அவர்கள் போலீசிடம் சிக்காமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் புத்தப்பாவின் கூட்டாளிகள் அனைவரும் அரப்பனஹள்ளி அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்து கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விடுவது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்பேரில் குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு இருந்த 10 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கள்ளநோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் 2 எந்திரங்கள், கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய கலர் பேப்பர்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டனர். பின்னர் கைதான 10 பேரையும் போலீசார் தாவணகெரே கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story