ஆந்திராவில் கன்னட பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும் - ஜெகன்மோகன்ரெட்டிக்கு, கர்நாடக மந்திரி கடிதம்


ஆந்திராவில் கன்னட பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும் - ஜெகன்மோகன்ரெட்டிக்கு, கர்நாடக மந்திரி கடிதம்
x
தினத்தந்தி 29 Jan 2020 11:00 PM GMT (Updated: 29 Jan 2020 7:13 PM GMT)

ஆந்திராவில் கன்னட பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும் என்று அந்த மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டிக்கு கர்நாடக மந்திரி சுரேஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு, 

ஆந்திர மாநிலத்தில் உள்ள கன்னட பள்ளிகளை மூடுவதாக அந்த மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டி அறிவித்து உள்ளார். இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து அந்த மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஆந்திரா-கர்நாடகம் எல்லை பகுதியில் உங்கள் மாநில எல்லைக்குள் உள்ள கன்னட பள்ளிகளை மூடுவதாக அறிவித்துள்ளீர்கள். இதனால் கன்னட மக்களின் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். கன்னடத்தை ஒரு மொழியாக அல்லது ஒரு வழியாக கற்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திராவில் வசிக்கும் கன்னட மக்களின் நலனை காக்க வேண்டும்.

கர்நாடகத்தில் ஏராளமான தெலுங்கு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு கன்னட பள்ளிகளை மூடுவதால் கன்னட ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அத்துடன் கர்நாடகத்திற்கு வெளியே இருப்பதால் சொந்த மொழியை கற்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கர்நாடகம் மற்றும் ஆந்திரா இடையேயான நல்லுறவு ஆண்டாண்டு காலமாக நீடித்து வருகிறது.

கிருஷ்ணதேவராயர் காலத்திற்கு முன்பு இருந்தும் இந்த இரண்டு மாநிலங்களும் எப்போதும் சகோதர மாநிலமாக நடந்து கொள்கின்றன. மொழி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் நமது 2 மாநிலங்களும் நல்லிணக்கத்துடனேயே இருக்கிறது. இது 2 மாநிலத்திற்கும் பெருமை அளிக்கக்கூடிய விஷயமாகும். அதனால் ஆந்திராவில் கன்னட பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும்.

இவ்வாறு சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

Next Story