இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை: “தமிழகத்தில் மக்களை ஏமாற்றும் ஆட்சி நடக்கிறது” - கனிமொழி எம்.பி. கடும் தாக்கு
“இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தருவதாக கூறி மக்களை ஏமாற்றும் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது“ என்று கனிமொழி எம்.பி. கடுமையாக தாக்கி பேசினார்.
தூத்துக்குடி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது.
தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
பா.ஜனதா அரசு தனக்கு பலம் இருக்கிறது என்ற காரணத்தை வைத்துக் கொண்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான சட்டங்களை தன்போக்கில் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. மக்கள் மனதில் பயத்தை விதைக்கக்கூடிய, பிரிவினை வாதத்தை விதைக்கக்கூடிய சட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றுகின்றனர். இஸ்லாமியர்கள் மீது மட்டும், ஒரு சிவில் சட்டத்தை கிரிமினல் சட்டமாக மாற்றி கொண்டு வந்து உள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தையும் போர்க்கால அடிப்படையில் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். இதனை நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் எதிர்த்தன. ஆனால் மாநிலங்களவையில், அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்து இருந்தால், இந்த சட்டத்தை நிறைவேற்றி இருக்க முடியாது. ஆனால் அ.தி.மு.க. அதனை செய்யவில்லை. இதனால் இன்று நாடே கொந்தளித்து எழும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் போராடக்கூடியவர்களுக்கு எதிராக போலீஸ் துறை செயல்பட்டு வருகிறது. மக்கள் போராட்டத்துக்கு பிறகும், மத்திய அரசு சட்டத்தை திரும்ப பெற மாட்டோம் என்று கூறி உள்ளது.
இதனால் ஒரு கோடி கையெழுத்து பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பி மக்களின் உணர்வுகளை எடுத்து சொல்ல வேண்டும் என்ற வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில், இரட்டை குடியுரிமை பெற்றுக் கொடுப்பதாக இங்கு உள்ள ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். இந்திய, இலங்கை சட்டங்களை மாற்றி இரட்டை குடியுரிமை எப்படி பெற்று கொடுப்பார்கள் என்பது தெரியவில்லை. மக்களை ஏமாற்றக்கூடிய ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. மக்களின் உணர்வுகளை அரசுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அனைவரும் இணைந்து போராட வேண்டும். இந்த சட்டம் திரும்ப பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த சட்டத்தை திரும்ப பெற வைத்து விட்டால், நாம் இந்தியாவை மீட்டெடுத்து விட்டோம் என்பது உறுதி. அவர்கள் அழிக்க நினைத்த இந்தியாவை நாம் காப்பாற்றி இருக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், ம.தி.மு.க. விநாயகா ரமேஷ், முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் மீராசா, மனதநேய மக்கள் கட்சி மண்டல பொறுப்பாளர் சம்சுதீன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர கிதர் பிஸ்மி, திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் பெரியாரடியான், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story