மாணவரை ஆசிரியர் தாக்கியதாக புகார் அரசு பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
பேரூர் அருகே மாணவரை ஆசிரியர் தாக்கியதாக கூறி அரசு பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பேரூர்,
கோவையை அடுத்த பேரூர் அருகே சுண்டக்காமுத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பேரூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராமங்களில் இருந்து 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் வீட்டு பாடங்களை சரியாக எழுதாததாக கூறி ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு ஆசிரியர் அந்த மாணவரை சாதி பெயர் சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவருத்தம் அடைந்த மாணவன் பள்ளி முடிந்ததும், புத்தகபையை தனது நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, பெற்றோருக்கு சொல்லாமல், கெம்பட்டி காலனியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டார். இரவு வெகுநேரமாகியும் மாணவன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பொற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடி பார்த்தனர்.
இதையடுத்து பள்ளி நண்பர்களிடம் விசாரித்தபோது, ஆசிரியர் சாதி பெயர் சொல்லி தாக்கியதால் மாணவன் கோபித்துக் கொண்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் இதுகுறித்து பேரூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தனர். இதன்பின்னர் பாட்டி வீட்டுக்கு சென்ற மாணவர் அழைத்து வரப்பட்டார்.
இதற்கிடையில் பள்ளி மாணவரை, ஆசிரியர் சாதி பெயரை சொல்லி திட்டிய சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்த தகவலின்பேரில் மாவட்ட கல்வி அலுவலர் சுப்புலட்சுமி, பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன், தாசில்தார் ராதாகிருஷ்ணன், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி தலைமையாசிரியை ராணி ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்முடிவில் மாணவரை சாதி பெயரை சொல்லி தாக்கிய ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி நிர்வாகத்தினர் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story