மதுரையில் முன்விரோதத்தில் பயங்கரம்: பெட்ரோல் குண்டு வீசி வியாபாரிக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


மதுரையில் முன்விரோதத்தில் பயங்கரம்: பெட்ரோல் குண்டு வீசி வியாபாரிக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Jan 2020 4:45 AM IST (Updated: 30 Jan 2020 2:48 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் முன் விரோதத்தில் பெட்ரோல் குண்டு வீசி வியாபாரியை வெட்டி கொலை செய்ய முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை,

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43). பலசரக்கு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை அடைத்து கொண்டிருந்தார். அப்போது முகத்தை மூடியபடி 5 பேர் நடந்து வந்தனர். அவர்கள் திடீரென்று கணேசனிடம் தகராறு செய்தனர். அப்போது அவர் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் அங்கு வரத்தொடங்கினர். அதை பார்த்த அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த 2 பெட்ரோல் குண்டுகளை கடையின் மீது வீசியது. இதில் கடையின் முன்பு தீப்பிடித்தது.

அந்த நேரத்தில் அந்த கும்பல் கணேசனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி விட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தெப்பக்குளம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன் விரோதத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது தெரிய வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் திருவிழா நடந்துள்ளது. அதற்காக கணேசனின் சகோதரி மகன் பூபதி வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த டிரைவர் முத்துச்செல்வம் அவரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அதுவே கோஷ்டி மோதலாக மாறி இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து தெப்பக்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருதரப்பினரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது இரு தரப்பினரும் நாங்கள் உறவினர்கள் என்பதால் எங்களுக்குள் சமரசமாக செல்கிறோம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து போலீசார் இருதரப்பினரிடம் எழுதி வாங்கி கொண்டு அவர்களை அனுப்பி வைத்து விட்டனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காமல் முத்துச்செல்வம், ஆட்களுடன் வந்து கணேசனை வெட்டி கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்தது. மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கணேசன் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரிடம் போலீசாரால் விசாரணை நடத்த முடியவில்லை.

போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் தெப்பக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்ட பலரிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அதில் ஏற்கனவே நடந்த மோதலின்போதே போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்று விசாரணையில் தெரிய வந்தது. எனவே இன்ஸ்பெக்டர் கணேசனை ஆயுதப்படைக்கு உடனே செல்லுமாறு உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதியில் தான் அதிகமாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க பாட்டிலில் யாருக்கும் பெட்ரோல் வழங்கக்கூடாது என்று அந்த பகுதியில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு போலீசார் உத்தரவிட்டு அதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.

Next Story