நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினா் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி


நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினா் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
x
தினத்தந்தி 29 Jan 2020 10:15 PM GMT (Updated: 29 Jan 2020 9:18 PM GMT)

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினா் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை,

கோவை புறநகர், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி பெறுவது, செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் கோவை அண்ணாசிலை அருகே உள்ள இதயதெய்வம் மாளிகையில் நேற்று நடந் தது. ஏ.கே.செல்வராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் கோவையில் 72 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்படும். அத்துடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும்.

வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினா் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். நமது ஆட்சியை கலைக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் எவ்வளவோ திட்டம் தீட்டினர். மேலும் வழக்குகளை தொடுக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோரின் ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது.

ஜெயலலிதா மட்டும் வாக்கு சேகரிக்க வராமல் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று இருந்தால் இன்னும் நம்மோடு இருந்து இருப்பார். அவர் கட்சிதான் முக்கியம் என்று இருந்தார். இதனால் தான் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா தொடர் ஆட்சியை கொண்டு வந்தார்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் அரசியல் ஆக்குகிறார். சிறுபான்மையின மக்களுக்கு பிரச்சினை வந்தால் அவர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் அ.தி.மு.க. இருக்கும். தி.மு.க.வினா் என்மீதும், அமைச்சர் தங்கமணி மீதும் பொய்வழக்கு தொடா்ந்து உள்ளனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைவதற்கு நான் உறுதுணையாக இருந்தேன். இதனால் என்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் எதிர்கட்சியினர் முன்வைக்கின்றனர். மு.க.ஸ்டாலின் போடும் பொய் வழக்குகளுக்கு நான் அஞ்ச மாட்டேன்.

சிறப்பான ஆட்சியால் உள்ளாட்சி துறையில் மட்டும் 107 விருதுகள் வாங்கி உள்ளோம். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக மாட்டார் என்று தி.மு.க.வினரே தெரிவித்து வருகிறார்கள். அ.தி.மு.க.வினர் தற்போது மக்களுக்காக கொடுக்கப்பட்டு உள்ள அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். கூட்டணி கட்சியில் தலைமை என்ன முடிவு செய்தாலும் அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டத்தின் அ.தி.மு.க. சார்பில் 72 ஜோடி ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மணமக்களுக்கு 72 வகை சீர்வரிசை பொருட்களுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சிறப்பாக நடத்துவது, ஊரக உள்ளாட்சி தேர்தலில் கட்சியை வெற்றிபெற வைத்த அனைத்து கழக நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சி பொறுப்பாளர்களுக்கும், பொது மக்களுக்கும் கூட்டத்தில் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்வது. வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற சபதம் ஏற்கவேண்டும் என்பன உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை சண்முகம், சூலூர் வி.பி.கந்தசாமி, கஸ்தூரி வாசு, முன்னாள் அமைச்சர்கள் பா.வே.தாமோதரன், தாமோதரன், வால்பாறை அமீது, ஆவின் தலைவர் கே.பி.ராஜு, முன்னாள் எம்.எல்.ஏ. மகேஸ்வரி, சி.டி.சின்னராஜ் மற்றும் தோப்பு அசோகன், அமுல்கந்தசாமி, சி.டி.சி.ஜப்பார், சந்திரசேகர், கே.ஆர்.ஜெயராமன், நெடுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story