புத்தகங்களை படித்தால் தான் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள முடியும் - மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை
புத்தகங்களை படித்தால் தான் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள முடியும் என்று மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே சிந்தாமணியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் நேற்று காலை காவல்துறை சார்பில் குற்றத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகேசன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சுசீலா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:-
மாணவ- மாணவிகளிடம் ஒழுக்கம் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். சாதி, மதம் பார்க்கக்கூடாது என்பதற்காகத்தான் மாணவ- மாணவிகளுக்கு சீருடை வழங்கப்படுகிறது. சினிமாவில் 20 நிமிடத்தில் கோடீஸ்வரர் ஆவது போன்று காட்சிகள் வரும். ஆனால் நிஜ வாழ்க்கையில் கோடீஸ்வரராக 20 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு கல்வி என்பது மிகவும் முக்கியமானது. கல்வியில் சிறந்து விளங்கினால்தான் சாதனையாளராக வர முடியும்.
குற்ற சம்பவங்களை தடுப்பதில் மாணவ- மாணவிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். போதைப்பொருள் பழக்கம் இருந்தாலே குற்ற செயல்களை செய்ய தோன்றும். ஆகவே போதைப்பழக்கத்திற்கு யாரும் அடிமையாகக்கூடாது. மாணவ பருவத்தில் மிகவும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். நன்றாக படித்து மிகப்பெரிய வேலைக்கு செல்ல ஒழுக்கத்தை முதலில் கடைபிடிக்க வேண்டும்.
மாணவர்கள் படிப்பு ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கஷ்டப்பட்டு படித்தால் பொது அறிவு தானாக வளரும். அறிவு வளர்ந்தால் போட்டித்தேர்வுகளை எழுதி அரசின் பெரிய, பெரிய பதவிகளுக்கு வர முடியும். அறிவு வளர பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி வரலாற்று புத்தகங்கள், தத்துவ புத்தகங்கள், சிறுகதைகள் படிக்க வேண்டும். படிக்க, படிக்கத்தான் எந்தவொரு போட்டித்தேர்வையும் எதிர்கொள்ள துணிச்சல் வரும். அற்ப காரியங்களுக்கு ஆசைப்பட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story